அரசாங்கம் அறிவித்ததன் பின்னர் பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் - கல்வி அமைச்சின் செயலாளர்
அரசாங்கம் அறிவித்ததன் பின்னர் பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் சிபார்சின்படியே பாடசாலையை திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
சமூக இடைவௌியை கவனத்திற் கொள்ளும் போது மாணவர்களின் ஒரு பகுதியினரையே அழைக்கவேண்டி ஏற்படும் எனவும் இதன்போது முன்னுரிமை வழங்கி முதலில் உயர்தர மாணவர்களையும் பின்னர் சாதாரண தர மாணவர்களையும் அழைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தநிலையில், 5ஆம் தர மாணவர்களை அழைப்பதா இல்லையா என்பதனை தீர்மானிக்க வேண்டும் எனவும் புலமைப்பரிசில் பரீட்சையை இன்னும் சற்று பிற்போட்டால் சிறந்தது என்பதே தனது தனிப்பட்ட நிலைப்பாடு எனவும் கூறிய அவர், அமைச்சர் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பார் எனக் கூறினார்.
பாடங்களை நிறைவு செய்து இறுதியாண்டு பரீட்சையை நடத்துவதே தமது நோக்கம். எனவே பரீட்சை திகதி மாற்றமடையலாம். எனினும் இதுவரை திகதியை மாற்றுவதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அதேநேரம் அரசாங்கம் அறிவித்ததன் பின்னரே பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்த கருத்து தெரிவித்தார்.
No comments