ஆளுமை நிறைந்த தனிமனிதனை உருவாக்குவதே கல்வியின் இலக்கு..!
எமது சூழலிலும் தனியாளை மையப்படுத்திய வகையில் தற்கால கல்வி முறைகள் மாற்றமடைந்து உள்ளதை அவதானிக்க முடிகின்றது. பல துறைகளாக கற்கை நெறிகள் மாணவர்களுக்காக வழங்கப்படுகின்றன. அவர்கள் அறிவுத் தேவைக்கும் திறனுக்கும் ஏற்ற வகையில் தமக்குரிய துறைகளை தேர்ந்தெடுத்து உயர்கல்வியிலும் பல்கலைக்கழகக் கல்வியிலும் கற்று தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்கின்றனர்.
எல்லா நாடுகளிலும் முன்பள்ளிப் பருவத்தில் இருந்தே கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் மாணவர்கள் தமது தனியாள் விருத்தியை வெளிக்காட்டுகின்றனர். இசை, நடனம், ஓவியம், விளையாட்டு, புத்தாக்க செயற்பாடுகள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள், கண்காட்சிகள் என கல்வி தனிமனித ஆளுமையையும் திறமையையும் வெளிப்படுத்த தனது கதவுகளை திறந்து வைத்துள்ளதை அவதானிக்கலாம்.
ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கற்கும் திறமை காணப்படுகின்றது. ஒவ்வொரு மாணவனதும் ஆளுமைக்கு ஏற்ற வகையில் அவனது தேவைகளை அறிந்தே ஒரு ஆசிரியர் கற்பிக்க வேண்டும் என கல்வி உளவியல் கூறுகின்றது.
நாம் தனியாகக் கல்வி கற்றாலும் அதை செயற்படுத்தக் கூடிய தளம் சமூகமே ஆகும். மனிதன் ஒரு சமூக பிராணியாவான். எனவே கல்விச் செயற்பாடுகள் சமூக செயற்பாடுகளாகவே உள்ளன.கல்வி சமூகத்திற்கான பரந்த நோக்கங்களையே மிக முக்கிய பண்பாக கொண்டுள்ளது. மனிதனை சமூகத்திற்கான வினைத்திறனான குடிமகனாகவும் நாட்டிற்கான நற்பிரஜையாகவும் உருவாக்குவதே கல்வியின் முக்கிய நோக்கமாகும்.
கற்றவர்கள் வாழ்கின்ற சமூகம் பிரச்சினைகளற்ற, புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் பண்புடைய சமூகமாகக் காணப்படும். அதுமட்டுமன்றி ஒவ்வொரு சமூகத்தின் தலைமுறைகளுக்கிடையில் தத்தமது கலாசாரத்தையும் பண்பாடுகளையும் கடத்தும் சாதகமாக கல்வி காணப்படுகின்றது. சமூகமானது எதிர்காலத்தில் ஒரு இலக்குடன் பயணிக்க கல்வி மிக முக்கிய விடிவெள்ளியாக திகழ்கின்றது.
கல்வியில் ஒழுக்க நோக்கங்கள் மிக முக்கியமானதொன்றாகும்.ஒழுக்கம் இல்லையேல் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியாது. ஒழுக்கத்தையும் கல்வியையும் மிகவும் பெறுமதியான ஒன்றாக அன்று முதல் இன்று வரை பாதுகாக்கின்றனர்.
தற்காலத்தில் கல்வி நாகரிகமாக மாறி விட்டது. தேவையை பூர்த்தியாக்கும் கல்வி முறையில் இருந்து நாம் இன்னும் மாற்றமடைய வேண்டும். அர்த்தமற்ற கல்வியை காட்டிலும் கல்வியானது தொழில் நோக்கம் கொண்டதாக அமைய வேண்டும்.இன்றைய கல்வித் திட்டங்கள் தற்கால வேலைத்தள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அரசியல் மாற்றங்கள் கல்வியின் நோக்கங்களில் பங்களிப்பு செய்கின்றன.
நாமும் தனிமனித ஆளுமையை விருத்தி செய்யக் கூடிய, சமூகத்தோடு பயனுள்ள சகலவிதமான அறிவையும் விருத்தி செய்யக் கூடிய, ஒழுக்கத்தை தரக் கூடிய, தொழிலை பெற்று கொள்ளக் கூடிய கல்வியைப் பெற வேண்டும். கல்வியின் நோக்கங்களை புரிந்து செயற்பட்டு நல்ல குடிமக்களாக நாட்டிற்கு சேவை செய்வது எமது கடமையாகும். அதனை உணர்ந்து கற்போம்.
நன்றி : தினகரன்
No comments