News

தெய்வ புலவர் சேக்கிழார் வரலாறு

தெய்வ புலவர் சேக்கிழார் வரலாறு


 சிவபெருமானின் அடியார்களான; அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை இயற்றிய; தெய்வ புலவர் சேக்கிழார் வரலாறு. இவர் ஒரு உத்தமமான சிவ அடியார். இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில்; முதன்மை மந்திரியாக பணியாற்றியவர். குலோத்துங்க சோழன் சீவகசிந்தாமணி எனும்; காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும் மக்களையும் நல்வழிப்படுத்த; சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும்; திருத்தொண்டர் புராணத்தினை அதாவது; பெரியபுராணத்தினை இயற்றியவர் ஆவார்.

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டு; சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார். அத்துடன் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்கச்சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது.

இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆனையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது.

தொண்டை நாடு

சேக்கிழார் பிறந்த தொண்டை நாடு, வடக்கே வேங்கடம் முதல் தெற்கே தென் பெண்ணையாறு வரை உள்ள நிலப் பரப்பு ஆகும். இதனில் தென் ஆர்க்காடு, வட ஆர்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களும், தற்போது, ஆந்திரத்திலுள்ள நெல்லூர், சித்துார் மாவட்டங்களின் பகுதிகளும் அடங்கும்.

இந்த நாட்டில் மலைகள் உண்டு. அவை காளத்தி, திருப்பதி, திருத்தணிகை, வேலூர், செங்கற்பட்டு முதலிய இடங்களில் இருக்கின்றன. இந்த நாட்டில் ஒரு காலத்தில் காடுகள் பல இருந்தன. இந்த உண்மையை ஆர்க்காடு, வேற்காடு, ஆலங்காடு, மாங்காடு முதலிய இக்கால ஊர்ப் பெயர்களைக் கொண்டும் உணரலாம்.

பல்லவ மன்னர்

பல்லவ அரசர்கள் தொண்டை நாட்டை நன்னாடு ஆக்கினர்; ஆங்காங்கு இருந்த காடுகளை அழித்துக் ‘காடு வெட்டிகள்’ என்று பெயர் பெற்றனர். கற்களைக் கோவில்களாகக் குடைந்தனர். கற்களைப் பாறைகளாக உடைத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில்களைக் கட்டினர். அவர்கள் தமிழ் - வடமொழி என்னும் இரண்டு மொழிகளையும் வளர்த்தனர். சைவப் பெரியார்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் முதலியவர் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்கள். திருமங்கை ஆழ்வார், தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் முதலிய வைணவப் பெரியார் வாழ்ந்த காலமும் பல்லவர் காலமே ஆகும்.

சோழ அரசர்

பல்லவர்க்குப் பிறகு சோழர் மீண்டும் தொண்டை நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர்; காஞ்சியில் பெரிய அரண்மனையைக் கட்டினர்; தொண்டை நாட்டில் பல புதிய கோவில்களை எழுப்பினர்; பழையவற்றைப் புதுப்பித்தனர்; தமிழையும் வடமொழியையும் வளர்த்தனர்; வைத்திய சாலைகளை அமைத்தனர். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன், அவன் மகன் ராஜேந்திர சோழன் முதலியவர் காலங்களில் தொண்டை நாட்டில் சைவமும் வைணவமும் செழித்து வளர்ந்தன. குடிகள் வாழ்வும் சிறந்து இருந்தது.

பழைய காலக் குன்றத்தூர்

குன்றத்தூரைப் பற்றித் திருநாகேசுவரம் கோவிலிலும் நத்தம் கோவில்களிலும் உள்ள கல்வெட்டுக்களைக் கொண்டு சில செய்திகளை அறியலாம். ஏறக்குறையச் சேக்கிழார் காலத்தில் அவ்வூர் பெரிய நகரமாக இருந்தது. பல பெரிய தெருக்கள் இருந்தன. மாட மாளிகைகள் இருந்தன. கோவில்கள் நல்ல நிலையில் விளங்கின. திரு நாகேசுவரம் கோவிலில் தேவரடியார் பலர் இருந்து கோவில் பணிகளைச் செய்து வந்தனர்; இசையையும் நடனத்தையும் வளர்த்தனர். கோவிலை அடுத்து ஒரு மடம் இருந்தது. அந்த மடத்தில் சைவ அடியார்கள் தங்கியிருந்தனர். கோவிலை மேற்பார்க்க ஒரு சபையார் இருந்தனர்.

குன்றத்தூர், செம்பரம்பாக்கம் ஏரிப் பாய்ச்சலை உடையது; செழுமையான வயல்களால் சூழப்பட்டது; சிறந்த மருத்துவர் ஒருவரைப் பெற்றிருந்தது. அம்மருத்துவர் குன்றத் தூரில் வைத்தியம் செய்து வந்தார். அந்த வைத்தியர் ஆசிரியராகவும் இருந்தார். அவரிடம் பலர் கல்வி பயின்றனர்.

குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் சைவத்திலும் வைணவத்திலும் பக்தி மிகுந்தவர்கள். அவர் கள் சேக்கிழார் கட்டிய சிவன் கோவிலுக்குப் பல தான தருமங்கள் செய்தனர்; பெருமாள் கோவிலையும் கவனித்து வந்தனர்.

சேக்கிழார் பிறப்பு

சேக்கிழார் குடி

ஆனால், சேக்கிழார் குடி இடம் பற்றி வந்தது அன்று. அஃது இரண்டு வகை பற்றி வந்திருக்கலாம். (1) சே - எருது; கிழான் - உரிமை உடையவன்; அஃதாவது எருதினை உரிமையாகக் கொண்டவன் (சிவன்) என்று சிவ பெருமானுக்குப் பெயராகும். அப்பெயரைக் கொண்ட வேளாள முதல்வன் சந்ததியார் ‘சேக்கிழார் குடியினர்’ என்று அழைக்கப் பட்டிருக்கலாம். (2) சேக்கிழான் என்பது எருதினைப் பயிர்த் தொழிலுக்கு உரிமையாகக் கொண்ட வேளாளன் என்றும் பொருள் படும். ஆனால் இப் பொருளை விட முன் சொன்ன பொருளே பொருத்தம் உடையது.

சேக்கிழார் குடியினர்

சேக்கிழார் குடியினர் பொதுவாகத் தொண்டை நாடு முழுவதிலும் பரவி இருந்தனர். வேளாளர் தமிழ் நாட்டில் அரசருக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள்; பழைய சேர - சோழ - பாண்டியருக்குப் பெண் கொடுத்துச் சம்பந்தம் செய்து வந்த குடியினர். ஆதலால் அவர்கள் நீண்ட காலமாக நாட்டு அரசியலில் பங்கு கொண்டு இருந்தனர்; அவர்கள் கல்வி கேள்விகளிலும் அரசியல் காரியங்களிலும் வழி வழியாகவே சிறந்திருந்தனர்.

குன்றத்தூர்ச் சேக்கிழார் குடியினர்

குன்றத்தூரில் தங்கி இருந்த சேக்கிழார் குடியினர் நமது சேக்கிழார் கால முதலே அரசாங்கத்தில் சிறப்புப் பெறலாயினர். நமது சேக்கிழார்க்கும் பிறகு அவர் தம்பியார்- பாலறாவாயர் முதலிய பலர் சிறந்த பதவிகளில் இருந்து சிறப்புப் பெற்றனர்.

சேக்கிழார் பிறப்பு

நமது சேக்கிழார் கி. பி. பதினோராம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் சிறந்த சிவ பக்தர்கள்; கல்வி கேள்விகளில் வல்லவர்கள்; நல்ல ஒழுக்கம் உடையவர்கள். அவர்கட்கு நெடுநாளாகப் பிள்ளை இல்லாமல் இருந்தது. அதனால் அவர்கள் தம் வழிபடு கடவுளாகிய சிவபெருமானை உருக்கத்தோடு வேண்டி வரம் கிடந்தனர்; பல தலங்கட்குச் சென்று தொழுது வந்தனர் ; பல தீர்த்தங்களில் நீராடினர். பின்னர் இறைவன் திருவருளால் அவர்கட்கு நமது சேக்கிழார் பிறந்தார். பெற்றோர் அந்த ஆண் குழந்தைக்கு அருள்மொழித் தேவர் என்று பெயரிட்டனர். அருள்மொழித் தேவர் என்பது சிவபெருமான் பெயர்களில் ஒன்றாகும்.

பிள்ளை வளர்ப்பு

பெற்றோர் இருவரும், வறியவன் தனக்குக் கிடைத்த செல்வத்தைப் பாதுகாப்பது போல, மிகுந்த கவலையுடன் குழந்தையை வளர்க்கலாயினர். குழந்தை நல்ல உடல் அமைப்பும் அழகும் கொண்டு வளர்ந்து வந்தது. பெற்றோர் அதனை நாளும் சீராட்டிப் பாராட்டி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வள்ர்த்து வந்தன்ர். இரண்டு மூன்று ஆண்டுகட்குப் பிறகு, மற்றோர் ஆண் மகவும் பிறந்தது. பெற்றோர் அதற்குப் பாலறாவாயர் என்று பெயரிட்டனர். அது ஞானசம்பந்தர் பெயர்களில் ஒன்றாகும்.

சேக்கிழாரும் பள்ளி வாழ்க்கையும்

சேக்கிழாருடைய பெற்றோர் சிறந்த ஒழுக்கம் உடையவர்கள். அவர்கள் அதிகாலையில் எழுந்திருப்பார்கள்; நீராடுவார்கள்; கடவுளைத் துதிப்பார்கள். அதனால் சேக்கிழாரும் ஐந்து வயது முதல் அவர்களுடைய நல்ல பழக்கங்களை மேற்கொள்ளலானார். சேக்கிழாருடைய தகப்பனார் சைவ சமய ஆசாரியர்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் இவர்களுடைய அருட் பாடல்களைக் காலையிற் பாடுவது வழக்கம். சிறுவராகிய சேக்கிழார் அப் பாடல்களை ஆவலோடு மனப்பாடம் செய்தார்.

சேக்கிழார் ஐந்து வயது முதல் பள்ளிக்குச் செல்லலானார். அவர் திருநீறு அணியத் தவறுவதில்லை. அவர் தினந்தோறும் தந்தையிடம் பாடம் படிக்கலானார்; பள்ளி ஆசிரியர் முதல் நாள் சொல்லிய பாடங்களை மறுநாள் பிழையின்றி ஒப்புவித்து வந்தார்; ஆசிரியரைக் கண் கண்ட தெய்வமாக வணங்கி வந்தார். சேக்கிழாரிடம் குரு பக்தி, அடக்கம், ஒழுங்கு, உண்மையுடைமை முதலிய நல்ல இயல்புகளைக் கண்ட ஆசிரியர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்; அவரது கூரிய புத்தி நுட்பத்தைப் பார்த்து வியந்தார். அதனால் அவர் தனிப்பட்ட முறையில் சேக்கிழார்க்கு வேறு பல் நூல்களையும் கற்பிக்கலானார்.

தாயாரிடம் பெற்ற கல்வி

சேக்கிழார் தாயார் சிறந்த உத்தமியார். அவர் சிறந்த ஒழுக்கமும் சிவ பக்தியும் உடையவர். அந்த அம்மையார் சைவ சமய ஆசாரியர்களுடைய வரலாறுகளைச் சேக்கிழார்க்குச் சிறு கதைகள் போலச் சொல்லி வந்தார். அக்கதைகள் சேக்கிழார்க்குச் சைவ சமயத்தில் அழுத்தமான பக்தியை உண்டாக்கின : அப்பெரியார்களுடைய பாடல்களை மனப்பாடம் செய்வதில் ஊக்கத்தை உண்டாக்கின. ஆகவே, அவர்தம் ஒய்வு நேரங்க்ளில் திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் முதலிய நால்வர் பாடல்களையும் மனனம் பண்ணலானார் ; அவற்றை ராகத்துடன் பாடவும் பழகிக் கொண்டார்.

புராணம் பாட விருப்பம்

சேக்கிழார் சைவ சமய ஆசாரியர் பாடல்களை நன்றாகப் பாடுவதைக் கண்ட பெற்றோரும் ஆசிரி 'யரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். அவர் மிகுந்த அறிவு நுட்பம் வாய்ந்தவர். ஆதலால் திருக்குறள் "முழுவதையும் மனப்பாடம் செய்துவிட்டார். இவ்வாறு சேக்கிழார் பல நூல்களையும் நன்றாகப் படித்து வந்தார். அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நாயன்மார் வரலாறுகளை ஒரு நூலாகப் பாட வேண்டும் என்று எண்ணினார். அந்தச் சிறுவயதில் தோன்றிய எண்ணமே அவரை இறுதியாகப் பெரிய புராணம் பாடச் செய்தது.

அநபாயன் முன்னோர்

சேக்கிழார் காலத்துச் சோழ அரசன் அநபாய சோழன் என்ற இரண்டாம் குலோத்துங்கன். அவன், பல்லவர்க்குப் பின் வந்து, தென் இந்தியா முழுவதையும் பிடித்தாண்ட சோழப் பேரரசர் வழி வந்தவன். பெயர் பெற்ற சோழ வீரர்களான ராஜராஜன், ராஜேந்திரன் என்பவர் அவன் முன்னோர் ஆவர்.

ராஜராஜன்

ராஜராஜன் சிறந்த போர் வீரன். அவன் சேர, பாண்டிய நாடுகளை வென்றவன்; இலங்கைத் தீவைக் கைப்பற்றியவன்; குடகு, முதலிய மேல் கடற்கரை நாடுகளையும் மைசூர்ப் பிரதேசத்தையும் தெலுங்கு நாட்டையும் கைக் கொண்டவன். அவனே தென் இந்தியா முழுவதையும் சோழர் ஆட்சிக்குக் கொண்டு வந்த முதல் அரசன். அவன் வீரத்தில் சிறந்து இருந்தாற் போலவே, சிவ பக்தியிலும் சிறந்து விளங்கினான்.

அப்பெருமகன் தஞ்சாவூரில் பெரிய கோவில் ஒன்றைக் கட்டி அழியாப் புகழ் பெற்றான். அக்கோவிலே தஞ்சைப் பெரிய கோவில் என்பது. ராஜராஜன் முன் சொன்ன திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் இவர்கள் பாடிய தேவாரப் பதிகங்களைத் தேடி எடுத்தவன்; அவற்றை நம்பியாண்டார் நம்பி என்ற சைவப் பெரியவரைக் கொண்டு முறைப்படுத்தியவன்; அப் பதிகங்களைப் பல கோவில்களில் பாட ஏற்பாடு செய்தவன்.

ராஜேந்திரன்

ராஜராஜன் செல்வ மைந்தன் ராஜேந்திரன். இவன் தந்தையைப் போலச் சிறந்த வீரன். இலங்கை முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தியவன்; கங்கை வரை சென்று அரசர் பலரை வென்று புகழ் பெற்றவன்; கங்கை நீரைத் தோற்ற அரசர் தலை மீது வைத்துத் தன் தலைநகருக்குக் கொண்டு வரச் செய்தவன் ; தன் கங்கா விஜயத்துக்கு அடையாளமாகப் புதிய தலைநகரம் ஒன்றைக் கட்டி, அதற்குக் கங்கைகொண்ட சோழ புரம் என்று பெயர் இட்டவன்.

இப்பேரரசன் தன் கடற்படையைச் செலுத்தி நிக்கோபர் தீவுகள், மலேயா தீபகற்பம், சுமத்ரா, ஜாவாத் தீவுகள் முதலியவற்றை வென்றவன். இவன் சிறந்த சிவ பக்தன். இவன் கங்கை கொண்ட சோழபுரத்தில் பெரிய சிவன் கோவிலைக் கட்டினவன் ; கோவில்களில் தேவாரம் ஒதுபவரை மேற் பார்க்கவும் தேவாரத்தை நாடெங்கும் பரப்பவும் ஓர் அரசாங்க அதிகாரியை நியமித்தவன். அந்த அதிகாரிக்குத் தேவார நாயகம் என்பது பெயர். ராஜேந்திரன் பெரும் புலவன் ; புலவர்கள் பலரை ஆதரித்தவன் ; பண்டித சோழன் என்ற பெயர் பெற்றவன்.

அரசன் கேள்விகள்

ஒரு நாள் அநபாயன் தனது சபையில் இருந்தான். அவனைச் சுற்றிலும் புலவர்கள் பலர் கூடியிருந்தனர். அவர்கள் பல நாட்டு விஷயங்களைப் பற்றி அவனிடம் தெரிவித்துக் கொண்டு இருந்தனர். அரசன் ஒவ்வொரு புலவருடைய ஊரைப் பற்றியும் நுணுக்கமாக விசாரிப்பது வழக்கம். அவர் ஊர் - நாடு - அரசன் பற்றிப் பல கேள்விகள் கேட்டு விஷயங்களை ஆவலோடு தெரிந்து கொள்வது அவனது இயல்பு. இவ்வாறு பேசிக் கொண்டிருந்த பொழுது, அவன் புன்னகையுடன் சபையோரைப் பார்த்து-

“புலவர்கள் பெருமக்களே, நான் மூன்று கேள்வி களைக் கேட்கின்றேன். அவை நெடுநாட்களாக என் உள்ளத்தில் உறுத்திக் கொண்டு இருக் கின்றன. நீங்கள் அவற்றுக்கு விடை கூற விரும்புகிறேன். உங்களால் முடியவில்லை ஆயின், உங்கள் ஊர்களில் உள்ள பிற புலவர்கள்களைக் கொண்டேனும் விடைகளை விசாரித்து, அனுப்புங்கள்,” என்றான்.

அரசன் இவ்வளவு அடிப்படை போட்டுப் பேசியது கேட்ட புலவர்கள். பயந்தனர் ; அவன் என்ன கேள்விகளை வெளியிடுவானோ என்று எண்ணினர்; அவற்றுக்கு ஏற்ற விடை கூறாவிடில் அவன் தங்களை இழிவாக எண்ணுவானோ என்று அஞ்சினர். ‘இவன் வெளியிடும் கேள்விகளைக் கேட்போம்’, என்று அவனை நோக்கினர்.

புலவர்கள்களின் மனத் தடுமாற்றத்தை அவர்கள் முகக் குறிகளால் உணர்ந்த வேந்தன் புன்னகை காட்டி, “புலவர்கள்களே, அம் மூன்று கேள்விகள் இவை,” என்று கூறினான். அவை கீழ் வருவன :

1. மலையிற் பெரியது எது?

2. கடலிற் பெரியது எது?

3. உலகிற் பெரியது எது?

புலவர்கள் கலக்கம்

இக் கேள்விகள் தமிழ் நூல்களைப் பற்றியவை என்பதைப் புலவர்கள்கள் எண்ணவில்லை. இவை தம்மைத் திடுக்கிடச் செய்ய அரசன் கேட்ட கேள்விகள் என அவர்கள் எண்ணினார்கள் "மலையிற் பெரியது எது? கடலை விடப் பெரியது எது? உலகத்தை விடப் பெரியது எது? இக் கேள்விகட்கு யாரே பதில் சொல்ல முடியும்: முடியாது! முடியாது!” என்று தமக்குள் பேசிக் கொண்டனர்.

சேக்கிழார் விடை

அநபாயன் கேள்விகள் தொண்டை நாட்டிற் பரவின. தொண்டை நாட்டுப் புலவர்கள்கள் யோசித்து விடை காண முயன்ற்னர்; முடியவில்லை. இக்கேள்விகளை ஒர் உத்தியோகஸ்தன் மூலமாகச் சேக்கிழார் கேள்விப்பட்டார்; நகைத்தார். "திருக்குறளைப் படித்துப் பாக்களை நினைவிற் கொண்டவரே இவற்றுக்கு விடை கூற வல்லவா!' என்று தமக்குள் கூறிக் கொண்டார். பின்னர் அவர் ஒவ்வொரு கேள்வியையும் எழுதி, அதன் கீழ், அதற்குரிய பதிலையும் எழுதித் தக்கவ்ர் மூலமாக அரசனுக்கு அனுப்பினார். அக்கேள்விகளும் விடைகளும் பின் வருவனவாகும் :-

1. மலையிற் பெரியது எது?
விடை : நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.
2. கடலிற் பெரியது எது?
விடை : பயன் தூக்கார் செய்தஉதவி நயன்துக்கின்

நன்மை கடலிற் பெரிது.
3. உலகிற் பெரியது எது?
விடை : காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.
இம்முன்றின் பொருள்

1. தனக்கு உரிய வாழ்க்கையில் இருந்து கொண்டு, அடக்கமும் ஒழுக்கமும் உடையவனது உயர்ச்சி மலை உயர்ச்சியை விடப் பெரியதாகும்.

2. ஒரு பயனையும் கருதாமல் செய்யப்படும் உதவியினது சிறப்பு, யோசிக்கும் பொழுது, கடலினும் பெரியதாகும்.

3. தக்க காலத்தில் செய்யப்படும் உதவி, மிகச் சிறியதாக இருந்தாலும், அது செய்யப்படும் சந்தர்ப்பத்தை நோக்க, உலகத்தை விடப் பெரியதாகும்.

அநபாயன் மகிழ்ச்சி

அரசன் இந்த மூன்று விடைகளையும் படித் தான். அவன் சிறந்த புலவன் அல்லவா? அதனால் சேக்கிழாரது. நுண்ணறிவினை வியந்தான் ; உடனே அவரைப் பார்த்து அளவளாவ ஆவல் கொண்டான். “உடனே வந்தருள்க!” என்று தொண்டை நாட்டுப் புலவர்கள்க்கு ஒலை போக்கினான்.

சேக்கிழார் வருகை

அரசர் பெருமானது ஒலையைக் கண்ட சேக்கிழார் மகிழ்ந்தார். அவர் அநபாயனுடைய தமிழ்ப் புலமையையும் அழுத்தமான சைவப் பற்றையும் கேள்விப் பட்டிருந்தார்; தமக்கு ஏற்ற மனப்பான்மையை உடைய அவனைக் காணச் சந்தர்ப்பம் கிடைத்ததற்கு மகிழ்ந்தார். அவன் ஆதரவைப் பெற்றுச் சைவத்தையும் தமிழையும் வளர்க்க எண்ணினார்; அதனால் அப் பெருமானைக் காணப் புறப்பட்டார்.

சேக்கிழார் - முதல் அமைச்சர்

அநபாயன் சேக்கிழாரது சைவப் பொலிவைக் கண்டான்; அவருடைய உடற்கட்டு, அழகியதோற்றம், திருநீற்று ஒளி, பரந்த பார்வை முதலியன அவன் உள்ளத்தைக் கவர்ந்தன. அரசன் அவரை வரவேற்று உபசரித்தான்; சிறிது நேரம் தமிழைப் பற்றியும் சைவ சமயம் பற்றியும் அவரிடம் பேசினான். தொண்டை நாட்டு அரசியல் சம்பந்தமான பல விஷயங்களைப் பற்றி அவரை விசாரித்தான்: முடிவில் அவர் அரசியல்-சமயம்-இலக்கியம் இவற்றில் சிறந்த அறிவுடையவர் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டான். அப்பொழுது அப் பெருமகன். அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அவன் தனது பேரவையில் இருந்த எல்லோரையும் பார்த்து- “தொண்டை நாட்டுப் பெரும் புலவராகிய அருள்மொழித் தேவர் இன்று முதல் நமது சோழப் பெருநாட்டு முதல் அமைச்சராக இருப்பார். நான் அவருக்கு உத்தம சோழப் பல்லவராயர் என்னும் பட்டத்தை மனமுவந்து அளிக்கிறேன்!”

என்று கூறி அவர் கழுத்தில் மலர் மாலை அணிவித்தான். அவையோர் அனைவரும் அரசன் பேச்சை வரவேற்று மகிழ்ந்தனர்.

சேக்கிழார் யாத்திரை

பெரு நாட்டின் முதல் அமைச்சர் தமது பெரு நாட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் அல்லவா ? இக்காலத்தில் நமது மாநில அமைச்சர்கள் நமது மாநிலம் முழுவதையும் சுற்றிப் பார்க்கிறார்கள் அல்லவா? சுற்றிப் பார்த்து, நாட்டு நிலவரங்களை அறிந்து, அவற்றிற்குத் தக்கபடி அரசியல் நடவடிக் கைகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆதலால் எல்லா அமைச்சர்களும் தம் ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை நன்றாகப் பார்வையிடுதல் கடமை யாகும். அவர்கள் கிராமந்தோறும் செல்வார்கள்; விளைச்சல், நீர்ப் பாசனம், கிராம ஆட்சி முறை, கோவில் நிர்வாகம், விவசாய வரி, தொழில் வரி முதலிய பல பொருள் பற்றிய விவரங்களைச் சேகரிப்பர் ; மேற்பார்வை இடுவர் ; குறைகளை நீக்குவர். இத்தகைய அரசியல் விவரங்களை அறிவதற்காகவே சேக்கிழார் நாடு முழுவதும் சுற்றலானார்.

சோக்கிழார் யாத்திரை - குறிப்புகள் தயாரித்தல்

காவிரியாற்றின் இரண்டு கரைகளிலும் பல நகரங்கள் உண்டு. அவற்றில் சிவன் கோவில்கள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை பாடல் பெற்ற தலங்கள். சேக்கிழார் அரசாங்க அலுவலைக் கவனித்துக் கொண்டே பாடல் பெற்ற கோவில்களையும் நன்றாகக் கவனித்தார்; அவை இருந்த ஊர்கள் - நாடுகள் - ஊர்களின் வளமை இவற்றை ஆராய்ந்தார்; ஓர் ஊர் ஒரு நாயன்மார் பிறந்த ஊராக இருந்தால் அங்குத் தங்கி, அந்த நாயனாரைப் பற்றிய தல வரலாற்றைக் கேட்டு அறிந்தார்; அவ் விவரங்கள் எல்லாவற்றையும். குறிப்பு எடுத்துக் கொண்டார்.

இந்த யாத்திரையில் சேக்கிழார் சோழ அரசலுக்கு அடங்கிய சிற்றரசர் பலரைச் சந்திக்க வேண்டியவர் ஆனார். அச்சிற்றரசருள் சிலருடைய முன்னோர்கள் நாயனாராக இருந்தவர். உதாரணமாகத் தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவலூரை ஆண்டவர் மலையமான்கள் என்பவர். அவருடைய முன்னோரே மெய்ப் பொருள் நாயனார் என்பவர். அந்த அரச மரபினர் தங்கள் முன்னோர் வரலாற்றை நன்றாக அறிந்திருப்பார்கள் அல்லவா? அதனால் சேக்கிழார் அவர்களைக் கண்டு தம் அரசியல் விஷயங்களைப் பேசிய பிறகு, அவர்கள் மரபில் தோன்றி மறைந்த நாயனார் வரலாற்றை விசாரித் துக் குறிப்புகள் எழுதிக் கொண்டார். இவ்வாறு அந்தந்தப் பரம்பரையினரைக் கேட்டு எழுதுவது மிகச் சிறந்தது அல்லவா? வழிப்போக்கர் பேச்சைக் கேட்டுத் தாறுமாறாக எழுதாமல், தக்கவர் மூலமாக விஷயங்களை அறிந்து எழுதுதல் பாராட்டிடத்தக்க முறையாகும்.

இந்த முறையைப் பின்பற்றிச் சேக்கிழார் சேரர்-சோழர்-பாண்டியர் முதலிய அரச மரபில் வந்த நாயன்மார் வரலாறுகளுக்கு வேண்டிய குறிப்புகளைத் தயாரித்தார்; மற்ற நாயனார். களைப் பற்றிய குறிப்புகளை அந்தந்த ஊராரைக் கேட்டுத் தயாரித்தார். சேக்கிழார் அரசாங்க வேலைகளை முன்னிட்டுச் சோழப் பெரு நாட்டில் பலமுறை யாத்திரை செய்தார். அப்பொழுது அந்தந்த நாட்டு இயற்கை அமைப்பு- ஊர் அமைப்பு முதலிய பல விவரங்களைக் கூர்ந்து கவனித்துக் குறிப்புகள் தயாரித்துக் கொண்டார்.

இளமை எண்ணம்

சேக்கிழார் இங்ங்ணம் அறுபத்து மூவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை ஏன் தயாரிக்க வேண்டும்? அவர் இளமையில் குன்றத்தூரில் படித்துக் கொண்டு இருந்த பொழுது என்ன எண்ணினார்? மக்களுக்குச் சமய உணர்ச்சியை ஊட்டிய சைவ சமய ஆசாரியர் வரலாறுகளைத் தாம் பாட வேண்டும் என்று எண்ணிக் கொண்டார் என்பது முன் கூறப்பட்டதன்றோ? அந்த எண்ணம் பல ஆண்டுகளாக வளர்ந்து வந்தது. அமைச்சர் பதவி கிடைத்தது. யாத்திரை செய்ய வசதி உண்டானது ஆதலால், சேக்கிழார் தமது இளமை எண்ணத்தைச் செயலில் கொண்டு வர முயன்றார்.

சேக்கிழார் அறிவுரை

சேக்கிழாரும் ராஜராஜனும்

சேக்கிழார் சீவகசிந்தாமணியை நன்றாகப் படித்தவர்; அதன் காவியச் சிறப்பை நன்கு அறிந்தவர்; ஆயினும் அரச சபையில் அதனை மிகுதியாக வெளிக்காட்டவில்லை. அரசன் அக் காவியத்தில் தன் கருத்தைச் செலுத்தினான்; சில பகுதிகளை இரண்டு மூன்று முறை வாசிக்கச் சொல்லிக் கேட்டு இன்பப்பட்டான்.

ஒரு நாள் மாலை இளவரசன் சேக்கிழாரை அழைத்துக் கொண்டு உலவச் சென்றான். இருவரும் ஒரு பூஞ்சோலையில் எதிர் எதிர் அமர்ந்தனர். அரண்மனையைச் சேர்ந்த அப் பூந்தோட் டத்தில் மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, முதலிய மலர்கள் விரிந்து நறுமணத்தை நாற்புறமும் பரப்பின. மெல்லிய காற்று அங்கு வீச, மலர்கள் அசைந்தாடின. அக் காட்சி அமைச்சரையும் இளவரசனையும் வரவேற்கும் காட்சி போலக் காணப்பட்டது.

உரையாடல்

இளவரசன் : புலவர்கள் பெருமானே, சீவகன் வரலாறு படிக்கவும் கேட்கவும் இன்பமாகவே இருக்கின்றது. அரசர் தினந்தோறும் அந் நூலினைத் தனியாகப் படித்தும் இன்பப் படுகிறார். நானும் சில பகுதிகளைப் படித்துப் பார்த்தேன். இன்பமாகத்தான் இருக்கிறது.

சேக்கிழார் : இளவரசரே, அந்நூல் படிக்கப் படிக்க இன்பம் தரும்; கதாநாயகனான சீவகன் வீரச் செயல்களும் பல கலைகளில் அவன் காட்டிய திறமையும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். அந்த நூலினை நான் முழுவதும் வாசித்தவன். செய்யுட்கள் அழகானவை. அக் காவியத்தைப் பாடிய திருத்தக்க தேவர் சிறந்த புலவர்கள் என்பது அக் காவியத்திலிருந்து புலப்படுகிறது. ஆனால்...

இளவரசன் : ‘ஆனால்’ என்ன? உங்கள் கருத்தைத் தெளிவாக்த் தெரிவியுங்கள். ‘ஆனால்’ என்னும் சொல், அந்நூலில் குறையுண்டு என்பதைக் குறிப்பாக உணர்த்துவது போலக் காண்கிறதே. அன்பு கூர்ந்து உங்கள் எண்ணத்தை அறிவியுங்கள். உங்களைப் போன்ற பெரும் புலவர்கள் கருத்தை அறிய வேண்டுவது அவசியம் அன்றோ?

சேக்கிழார் : இளவரசே, சீவகன் உங்களைப் போன்ற அரச மரபினன்; அரசன். அவன் வரலாறு படித்தறிய வேண்டுவது அவசியமே. அவன் வரலாறு தமிழ்க் கவியில் பாடப்பட்டிருப்பதால் காவிய நயத்துக்காக நூலை வாசிக்க வேண்டுவது நமது கடமை. ஆனால் அந்த வரலாறு இப்பிறப்பில் இன்பத்தைத் தருமே தவிர, ஆன்மாவிற்கு எவ்வகையில் துணை செய்ய வல்லது? நமது சைவ சமயத்தை வளர்க்க அஃது உதவி செய்யாது அல்லவா? ஆதலின் இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தரத்தக்க வரலாறுகளே அரசர்களும் குடி களும் போற்றிப் படிக்கத் தகுவன ஆகும்.

இளவரசன் : புலவர்கள் பெருமானே, நீர் கூறியது உண்மை. அங்ஙனம் இருமையும் பயக்கத் தக்க வரலாறுகள் எவை?

சேக்கிழார் : ராஜராஜரே, இந்த உலகில் துய வாழ்வு வாழ்ந்து, மக்களை நல்வழிப் படுத்தி, அவர்களுக்குத் தொண்டு செய்து மறைந்த பெருமக்களுடைய வரலாறுகளே நமக்கு ஏற்றவை. அங்ஙனம் தோன்றி மறைந்த பெருமக்களே திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் முதலியோர். அவர்கள் வடக்கே காளத்தி வரை கால்நடையாக நடந்து ஏறக்குறைய இருநூற்றுக்கு மேற்பட்ட கோவில்களைத் தரிசித்தவர்கள். அங்கங்கு இருந்த மக்கள் உள்ளத்தைக் கடவுள்பால் திருப்பத் திருப் பதிகங்கள் பாடினவர்கள்; பல அற்புத்ங்களைச் செய்தவர்கள். திருநாவுக்கரசர் தமது எண்பத் தோரு வயது வரை யாத்திரை செய்து மக்கட்கு அறிவுரை-சமயவுரைகளைப் பதிகங்கள் மூலமாகப் போதித்து வந்தவர் என்றால், அப் பெருமக்களுடைய வரலாறுகள் எத்தகையனவாக இருத்தல் வேண்டும் அவற்றைக் கேட்பதால் - படிப்பதால் நமது சமய முன்னேற்றத்துக்குரிய பல தொண்டுகளைச் செய்ய யோசனை உண்டாகும். நமக்கும் இம்மையில் இன்பமும் மறுமையில் நற்பயனும் கிடைக்கும் அல்லவா?

ராஜராஜன் : அமைச்சர் பெருமானே, உங்கள் கருத்தை உணர்ந்தேன். நீங்கள் கூறுவது முற்றும் உண்மையே.

அரசனும் இளவரசனும்

அன்றிரவு இளவரசன். தன் தந்தையைக் கண்டு சேக்கிழார் கருத்தை விளங்க வுரைத்தான். அநபாயன் சிறந்த புலவன் அல்லவா? அவன் சேக்கிழார் யோசனையைப் பாராட்டினான்; சமண காவியமாகிய சிந்தாமணியைச் சைவர் படிக்கலாகாது என்று கூறாத அவரது பரந்த அறிவையும் பாராட்டினான்; மறுநாள் சேக்கிழாரைக் கண்டு பல ஐயங்களைப் போக்க விரும்பினான்.

அநபாயனும் அமைச்சரும்

மறுநாள் காலை சேக்கிழார் அரசியல் விஷயமாக அரசனைப் பார்க்கச் சென்றார். அப்பொழுது அரசன் அவரை முக மலர்ச்சியோடு வரவேற்று உட்காரச் செய்தான். அவரை அன்புடன் நோக்கி, “புலவரே, நீங்கள் ராஜராஜனிடம் நேற்றுக் கூறியவற்றைக் கேள்வியுற்றேன். உங்கள் யோசனை பாராட்டுதற்கு உரியது. ஆனால் அத் தகைய பெரியோர் வரலாறுகள் காவிய ரூபத்தில் இல்லையே! அவற்றை நாம் எவ்வாறு அறிவது?” என்று கேட்டான்.
 
அமைச்சர், “அரசர் பெருமானே, தேவார ஆசிரியர் வரலாறுகளைப் பற்றி நம்பியாண்டார் நம்பி என்பவர் பல சிறு நூல்களைப் பாடியுள்ளார் அல்லவா? அவற்றுடன் அவர்கள் பாடிய தேவாரப் பதிகங்களையும் ஆராய்ந்தால் அவர்களுடைய வரலாற்றுச் செய்திகளைப் பெரிதளவு அறியலாம். மேலும் அப்பெரியார்கள் யாத்திரை சென்ற இடங்களிலும் பிறந்த ஊர்களிலும் அவர்களைப் பற்றி வழங்கும் கதைகளும் ஆராயத் தக்கவை. அவற்றில் பொருத்தமானவற்றைக் கொண்டு இம்மூன்றையும் இணைத்து முறைப்படுத்தினால், அவர்கள் மூவருடைய வரலர்றுகளும் செவ்வையாகச் செப்ப முடியும். மற்ற அடியார்களுடைய வரலாறுகள் நம்பியால் திருத்தொண்டர் திருவந்தாதியில் குறிக்கப் புட்டுள்ளன அல்லவா? அவற்றோடு அவரவர் பிறந்து வாழ்ந்த ஊர்களில் கூறப்படும் வரலாற்றுச் செய்திகளையும் இணைத்தால் விளக்கமான வரலாறு கூற முடியும்,” என்றார்.

அநபாயன் வியப்புக் கொண்டான். அவன் அமைச்சரை நோக்கி, ‘ஐயனே, உமது யோசனை நல்லதே. ஆயின், இவ்வளவு அரும் பாடுபட்டு நாயன்மார் வரலாறுகளைத் தொகுப்பவர் யாவர்? இவ்வரிய வேலைக்குப் பல ஆண்டுகள் வேண்டும். பொறுமையும் சமயப் பற்றும் வேண்டும். தமிழ் நாடு முழுவதும் சுற்ற வேண்டுமே!’ என்று கூறினான்.

அமைச்சர், பெருமானே, நான் தங்களிடம் அமைச்சனாக வந்த நாள் முதல் இந்த வேலையில் ஈடுபட்டேன்; என்யாத்திரைகளில் எல்லாத் தலங்களையும் சுற்றிப் பார்த்தேன்; குறிப்புகள் சேகரித்தேன்; பின்னர் ஓய்வு நேரங்களில் அவற்றை முறைப்படுத்தி வைத்திருக்கிறேன்!” என்று பதில் உரைத்தார்.

நாயன்மார் வரலாறுகளைக் கேட்டல்

அந்தப் பதிலைக் கேட்டு அநபாயன் ஆச்சரியம் கொண்டான். “என்ன, நாயன்மார் வரலாறுகளை ஆராய்ந்து முறைப்படுத்தியிருக்கிறீர்களா? எங்கே, கூறுங்கள், கேட்போம்!” என்று மிக்க ஆவலுடன் கூறினான்.

சேக்கிழார் மாதிரிக்காக ஓர் அடியார் வரலாற்றை விளக்கமாக உரைத்தார். அரசன் ஆனந்தப் பரவசம் அடைந்தான். அவன் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணிர் அரும்பியது. அவன் மற்றவர் வரலாறுகளையும் கூறும்படி வேண்டினான். புலவர்கள் பெருமான் நாள் தோறும் அவ் வரலாறுகளைக் கூறி வந்தார்.

புராணம் பாட வேண்டுதல்

அரசன் உண்மைச் சைவன் அல்லவா? அவன் மனத்தில் பெரியதோர் மாறுதல் உண்டாயிற்று. சேக்கிழாரைக் கொண்டே நாயன்மார் வரலாறுகளைப் பெரியதோர் புராணமாகப் பாடி முடிக்க வேண்டும் என்று தீர்மானித்தான். ஆதலின் அவன் எழுந்து அமைச்சரை மார்புறத் தழுவி, “பெரியீர், உம்மை அமைச்சராகப் பெற்ற நான் பாக்கியம் செய்தவனானேன். நம் சைவ சமயத்துக்காக அரும்பாடு பட்ட பெரியோர் வரலாறுகள் ஒரு காவியமாக வர வேண்டும் என்று எனக்கு நெடு நாளாக எண்ண முண்டு. ஆனால் அதற்கு உரிய முயற்சியும் உழைப்பும் அதிகம் வேண்டுமே அப் புணியை மேற்கொள்பவர் யாவர் என்று எண்ணி ஏங்கினேன். என் பிறவி இன்று பயன் பெற்றது. தாங்களே அடியார் வரலாறுகளை ஒரு புராண மாகப் பாடித் தருதல் வேண்டும். சைவ உலகம் நல்வழிப்பட என்றென்றும் தங்கள் பெயர் இருக்கத் தக்கவாறு திருத்தொண்டர் புராணம் பாடி அருளுக!” என்று வேண்டினான்.

தில்லையை அடைதல்

சேக்கிழார், "பெருமானே, நான் தில்லைப் பெருமான் அருளைப் பெற்றுப் பாட முயல்வேன். நான் தில்லையில் இருந்தே அவ்வேலையை முடிப்பேன்!” என்றார். உடனே அரசன் தில்லையில் இருந்த மாளிகை ஒன்றில் அமைச்சர்க்கு வேண்டிய வசதிகளைச் செய்வித்தான். நல்ல நாளில் சேக்கிழார் அரசனிடமும் இளவர்சனிடமும் விடைபெற்றுத் தில்லையை அடைந்தார். அரசன் தயாரித்து வைத்த அழகிய மாளிகையில் எல்லா வசதிகளுடனும் தங்கினார்.

பெரிய புராண அரங்கேற்றம்

தில்லைவாழ் அந்தணர்

தில்லை, சைவ உலகத்தில், சிறந்த தலமாகக் கருதப் பட்டது. அந்தத் திருத்தலத்தில்தான் நடராஜப் பெருமானைப் பூசிக்க மூவாயிரம் குருக்கள் இருந்தனர். அவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள்; சிறந்த ஒழுக்கம் உள்ளவர்கள். சோழ அரசர்கள் அவர்களைக் கெளரவமாக நடத்தி வந்தார்கள். அவர்கள் தில்லைவாழ் அந்தணர் எனப் பெயர் பெற்றனர்.

தில்லை நகரம்

தில்லை ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களாகச் சைவத்திற்குப் பெயர் பெற்ற தலம் ஆகும். பல்லவ அரசர் அதனை அலங்காரப் படுத்தினர். நகரத்தைச் சுற்றி மதில் எழுப்பப்பட்டு இருந்தது. அந்த நகரம் இன்றுள்ளதை விடப் பல கி. மீட்டர் சுற்றளவு உடையதாக இருந்தது. ராஜேந்திரன் அமைத்த கங்கைகொண்ட சோழபுரம் தில்லைக்கு நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்றது. அதனால் ராஜேந்திரன் காலம் முதல் தில்லை மிக்க சிறப்புப் பெற்றது. அநபாயன் பாட்டனான முதற் குலோத்துங்கன் காலத்தில் கடல்வரை நல்ல பாதை போடப்பட்டது. கடற்கரையில் ஒரு மண்டபம் கட்டப்பட்டது. சுவாமி அங்குக் கொண்டு செல்லப்பட்டது. பெரும்பாலும் நாள் தோறும் விசேஷமான பூஜைகள் நடைபெற்றன. அநபாயன் தந்தையான விக்கிரம சோழனும் அநபாயனும் செய்த திருப்பணிகள் முன்பே கூறப் பட்டன அல்லவா? ஆகவே, சேக்கிழார் காலத்தில் தில்லை மெய்யாகவே ‘பூலோக கயிலாயம்’ என்று சொல்லத் தக்க முறையில் விளங்கியது.

சேக்கிழார் வேண்டுகோள்

இத்தகைய தில்லையை அடைந்த அமைச்சர் பெருமான் நல்ல நேரத்திற் புறப்பட்டுக் கோவிலை அடைந்தார்; விதிப்படி வலம் வந்தார்; திருச் சிற்றம்பலத்தின் முன் நின்று நடராஜப் பெருமானைத் தரிசித்தார். தரிசித்து, “பெருமானே ! பெருமை பொருந்திய நின் அடியர் வரலாறுகளை அடியேன் எவ்வாறு பாடுவேன்! எனக்கு முதல் தந்து அருள்க!” என்று வேண்டி நின்றார்.

‘உலகெலாம்’

அவ்வமயம் "உலகெலாம்" என்ற சொற்றொடர் அவர் காதிற் பட்டது. சேக்கிழார் அதனை இறைவன் தந்ததாக எண்ணி, அதனையே முதலாகக் கொண்டு, தமது நூலைப் பாடத் தொடங்கினார்.

“உலகெலாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு வாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்”
என்பது கடவுள் வாழ்த்து.

நூல் பாடி முடித்தது

சேக்கிழார் கடவுள் வாழ்த்தை முதலாகக் கொண்டு நூல் பாடத் தொடங்கினார். ஒரு வருட காலம் தில்லையில் தங்கி நூலைப் பாடி வந்தார். தமக்கு அவ்வப்பொழுது உண்டான சந்தேகங்களைத் தில்லை வாழ் அந்தணர் முதலிய பலவூர்ப் பெரியோர்கட்கு ஆட்களை அனுப்பித் தீர்த்துக் கொண்டார்; ராப்பகலாகப் புராணம் பாடுவதை மேற்கொண்டார்; ஓராண்டு முடிவில் திருத் தொண்டர் புராணத்தைப் பாடி முடித்தார்.

நூல் அரங்கேற்றம்

அமைச்சர் பெருமான் நூலைப் பாடி முடித்தார் என்பதை அரசர் பெருமான் கேள்விப்பட்டான், நூல் அரங்கேற்றம் செய்ய ஒரு நாளைக் குறிப்பிட்டான். தமிழ் நாட்டுப் புலவர்கள்-சைவப் பெருமக்கள். சிற்றரசர் முதலியோருக்கு ஒலைகளைப் போக்கினான். அரங்கேற்றத்திற்கு உரிய நாளில் தில்லை நடராஜப் பெருமான் திருக்கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சபை கூடியது.

நடராஜப் பெருமானது உருவச் சிலை அலங்காரம் செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தது. மன்னர் மன்னனான அநபாயன் நடு நாயகமாக வீற்றிருந்தான். அவன் அருகில் இளவரசன் ராஜராஜன் இருந்தான். அரசனுக்கு மறு பக்கத்தில் அவைப் புலவரான ஒட்டக்கூத்தர் இருந்தார். ஒரு பக்கம் சைவப் பெருமக்கள் கூடி இருந்தனர். ஒரு பால் புலவர்கள்கள் குழுமி இருந்தனர் ; ஒரு மருங்கில் சிற்றரசர் திரண்டு இருந்தனர்.

சேக்கிழார் பெருமான் உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் ஒரு சிறிய மேசை இடப்பட்டிருந்தது. அதன் மீது திருத்தொண்டர் புராண நூல் வைக்கப் பட்டிருந்தது. அவரது சிவ வேடம் அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தது. அப் பெருமான் குறித்த நேரத்தில் மேற்சொன்ன கடவுள் வாழ்த்தைப் பாடி, நூலை அரங்கேற்றம் செய்யலானார்.

அவர் தமக்கு முன் இருந்த நூல்களுடன், தம் காலத்தில் இருந்த பெரியோர்களைக் கேட்டுப் பல செய்திகளைச் சேகரித்தார் என்று முன் சொன்னோமல்லவா? அந்தப் பெரியோர்கள் தாம் சொன்ன குறிப்புகள் சேக்கிழார் பாடிய நூலில் இருந்ததைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். சேர- சோழ-பாண்டியர் வரலாறுகள் ஒழுங்காகப் பிழையின்றிக் கூறப்பட்டு இருந்ததால் அம் மரபுகளைச் சேர்ந்த அரசர்கள் மன மகிழ்ச்சி கொண்டார்கள். நூல் முழுவதும் சிவன் அடியார் பெருமையே பேசப்பட்டு இருந்ததால் சைவப் பெரியார் மனம் களித்தனர். காவிய இலக்கணம், செய்யுள் இலக்கணம் முதலிய இலக்கண-இலக்கியப் பண்புகள் நிறைவுற்று இருந்ததைக் கண்ட புலவர்கள் பெருமக்கள் அந்நூலினைப் பாராட்டினார்கள். இங்ஙனம் பல வகைப்பட்ட தமிழ் நாட்டுப் பேரறிஞர் முன்னிலையில் திருத்தொண்டர் புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

அரச வரிசைகள்

அநபாயன் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவன் சேக்கிழாரையும் அவர் பாடிய புராணத்தையும் யானை மீது ஏற்றித் தில்லைப் பிரான் திருக்கோயிலை வலம் வரச் செய்தான். தான் சேக்கிழார் பின்னிருந்து கவரி வீசி மகிழ்ந் தான். அரண்மனையை அடைந்ததும் அவருக்குத் "தொண்டர் சீர் பரவுவார்" என்ற பட்டத்தையும் விலை மதிப்பற்ற ஆடை அணிகளையும் தந்தான். பல சிற்றுார்களை வழங்கினான்.

பாலறாடிாயர்க்குப் பதவி

அரசன் அவரை நோக்கி, "சைவப் பெரியீர், சைவ உலகம் செய்த நற்பேற்றின் பயனாக வந்த புலவர்கள் மணியே, தாங்கள் இன்று முதல் தவ முனிவராக இருக்க வேண்டுபவர் ஆயினீர். இனி உம்மை அமைச்சராக வைத்திருப்பது பாபம். யான் தங்களிடத்தில் வேலை வாங்குதல் தவறு. தங்கள் மரபு அரசாங்கத்தில் பெயர் பெற வேண்டும்; ஆதலால் தங்கள் அருமைத் தம்பியார் பாலறாவாயர் தொண்டை மண்டலத்தைக் காத்து வரும் மாகாணத் தலைவராக இருக்கக் கடவர். தாங்கள் சிவ ஸ்தல யாத்திரை செய்து கொண்டு, சைவ சமய வளர்ச்சிக்கும் தங்கள் ஆன்ம அமைதிக்கும் உரிய செயல்களில் ஈடுபடலாம்!” என்று அன்பும் பணிவும் தோன்றக் கூறினான்.

சேக்கிழார் தல யாத்திரை

சேக்கிழார் பெருமான் அரசன் விருப்பப்படி அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். நாயன்மார் பாடல் பெற்ற ஸ்தலங்கட்கு யாத்திரை சென்றார். அங்கங்குப் பல திருப்பணிகள் செய்தார். தமது பிறந்த இடமாகிய குன்றத்துரில் தங்கித் திருநாகேசுவரப் பெருமானைப் பணிந்து தவம், கிடந்தார்.

சேக்கிழார் சிறப்பு

சேக்கிழாரது திருத்தொண்டர் புராணம் இல்லாவிடில் நாயன்மார் வரலாறுகளை நாம் விளக்கமாக அறிய முடியாது; நாயன்மார் காலத்துச் சைவ சமய நிலைமையை நாம் அறிய வழியில்லை. அந்தக் காலத்தில் இந்த நாட்டில் இருந்த பெளத்த சமயத்தைப் பற்றியும் சமண சமயத்தைப் பற்றியும் தெளிவாக அறிய முடியாது. அக்கால உள்நாட்டு-வெளி நாட்டு வாணிகம்-நாட்டு நடப்பு-பலவகைப்பட்ட மக்களுடைய பழக்கவழக்கங்கள், பலவகைப்பட்ட நில வகைகள் முதலிய விவரங்களை உள்ளவாறு உணர முடியாது.

திருத்தொண்டர் புராணத்தில் கூறப்படும் நாயன்மார் காலம், நீங்கள் வரலாற்றில் படிக்கும் பல்லவர் காலம் ஆகும். அந்தக் காலத்துத் தமிழ் நாட்டுச் சைவ-பெளத்த-சமண சமயங்களின் நிலைமையைத் திருத்தொண்டர் புராணத்தைத் தவிர வேறு தமிழ் நூலில் விரிவாகக் காண இயலாது. அக்காலத் தமிழ் அரசர்களைப் பற்றிய ப்ல விவரங்களை இக் காவியத்திற் காணலாம், பல்லவர்-சாளுக்கியர் போர், பல்லவர்-தமிழ் அரசர் போர், பாண்டியர்-சாளுக்கியர் போர், அக்காலத்தில் உண்டான பெரும் பஞ்சங்கள் முதலிய சரித்திர சம்பந்தமான செய்திகளையும் இப்பெரிய நூலில் காணலாம்.

திருத்தொண்டர் புராணத்திற்குப் பெரிய புராணம் என்னும் பெயரும் உண்டு. இந்நூல் எளிய நடையில் பாடப்பட்ட 1253 செய்யுட்களை உடையது. இது தமிழ் மக்களது செல்வம் எனலாம். இது இலக்கியம் வரலாறு கலைகள் சமயங்கள் முதலியவை பற்றிய விவரங்களைக் கூறும் பெருங்காவியம். ஆதலின் நாம் இப் பெரு நூலினைப் படித்து, இதனை மிக்க ஆராய்ச்சியோடு நமக்குப் பாடித் தந்த சேக்கிழார் பெருமானுக்கு நன்றி செலுத்துவோமாக!

சேக்கிழார் திருப்பெயர் வாழ்க செழித்து வாழ்க!!.

சிவபெருமான் உணர்தற்கு அருமையானவன; கங்கையையும் பிறைச் சந்திரனையும் முடியில் தரித்தவன்; சோதி வடிவானவன்; சிற்றம்பலத்தில் நடனம் செய்பவன்; அப்பெருமானுடைய மலர் போன்ற சிலம்பணிந்த திருவடிகளை வணங்குவோம்.

 திருச்சிற்றம்பலம் 

No comments

Lanka Education. Powered by Blogger.