இலங்கை பாடசாலைக் கல்வி முறையில் தொழில்கல்வி
அறிமுகம்
“மாணவர்கள் கற்பதற்கு அல்லாமல்; சிலவற்றை செய்வதற்கு கற்றுக்கொடுங்கள்….”
ஜோன்டியூவி
என்ற கூற்று பாடசாலைக்கல்வியில் செயற்பாட்டுக்கற்றலினூடான தொழில்கல்வி முறைமையின் அவசியந்தனை வலியுறுத்துகின்றது. அறிவுசார் விருத்தி, திறன்சார் விருத்தி, பண்புசார் விருத்தியினை அடிப்படையாகக்கொண்ட பாடசாலைக் கல்வி திறன்சார் விருத்தி என்ற அடிப்படையில் தொழில்கல்வியினூடாக தொழில்சார் திறன் விருத்தியை மேம்படுத்துகின்றது. இங்கு தொழில்சார் திறன்கள் எனும்போது மனிதர்களிடத்தில் காணப்படுகின்ற தொழில்சார் ஆற்றல்களாகும்.
பல்வேறு முறைகளில் தொழில்சார்திறன்; விருத்தி மனிதர்களிடத்தில் ஏற்படுகின்ற போதிலும் பாடசாலைகள் பொதுக்கல்வியினூடே மாணவர்களிடத்தில் தொழில்சார் திறன்களின் விருத்திக்கான ஆரம்பக்களமாக காணப்படுகின்றன. ஆகவே இலங்கை பாடசாலைக்கல்விக்கட்டமைப்பில் மாணவர்களிடத்தில் தொழில் கல்விசார் திறன்களை மேம்படத்தும் முறையில் எத்தகைய முன்னெடுப்புக்கள் காணப்படுகின்றன என்பதனை நாம் நோக்குதல் அவசியமானதொன்றாகும்.
தொழில் கல்வி என்றால் என்ன?
மனிதர்கள் சிறந்த தொழில்முறையை தெரிவு செய்வதற்கும் அவர்சார்ந்த தொழிலை திறம்பட மேற்கொள்ளும் பொருட்டும் விருத்தி செய்யப்பட வேண்டிய திறன்களை வழங்குவது தொழில் கல்வியாகும். துயமந என்பவர் கூறுகையில் “வர்த்தகம் அல்லது தொழில்சார் செயன்முறையில் ஒருவர் முன்னோக்கி செல்வதற்கு உதவும் பயிற்சியுடன் கூடியதும் முதன்நிலையானதுமான திறன்கள் தொழில்சார் திறன்களாகும்” என்கிறார். தொழில்சார் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு வழங்கப்படும் கல்வியினூடே தொழில்சார் திறன்கள் விருத்தி செய்யப்படுகின்றன.
மின்னியல், கணினி, உணவுத்தொழிநுட்பம், தச்சுக்கலை, சாரதிப்பயிற்சி, பொறியியல், விவசாயம், மருத்துவம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்து துறைகளிலும் தொழில்சார் திறன்கள் விருத்தி செய்யப்படுகின்றன. பயிற்சியுடன் இணைந்தவகையில் இத்தகைய திறன்கள் விருத்தி செய்யப்படுகின்றமை முக்கிய அம்சமாகும். தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழிநுட்பக்கல்லூரிகள், உயர் தொழிநுட்பக்கல்லூரிகள், தொழில்சார் தொழிநுட்ப பல்கலைக்கழகம், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் முறைசாராக்கல்வி முறையினூடாக தொழில்சார் கல்வியை வழங்குகின்றன. எவ்வாறு இருப்பினும் பாடசாலைக்கல்வி கட்டமைப்பில் தொழில்சார் திறன்களின் விருத்தி முக்கிய இடம்பெறுகின்றது.
பாடசாலைக்கல்வியும் தொழில்சார்திறன்விருத்தியும்
உலக வங்கி 2019 இல் எதிர்கால வேலை உலகிற்கான உலக அபிவிருத்தி அறிக்கையில் “தொழில்கல்வி மற்றும் பொதுக்கல்விக்கிடையிலான இணைவுத்தன்மை மாற்றமுறும் தொழிநுட்பத்தின் அதீத செல்வாக்கை கொண்டுள்ள தொழில் சந்தைக்கு ஏற்ப ஒவ்வொருவரையும் ஏற்புடையவர்களாக மாற்றுவதில் மிகமுக்கிய பங்குவகிக்கின்றது” இக்கருத்தானது பொதுக்கல்வி முறையில் தொழில்சார் கல்வியின் இணைவின் அவசியத்தை எமக்கு புலப்படுத்துகின்றது. வெறுமனே மனப்பாடம் செய்யும் கல்வி முறைக்கு மாறாக பயிற்சியுடன் கூடிய தொழில்கல்வி மாணவர்களுக்கு வழங்குவது அவர்களை சமூகத்தில் வினைத்திறன்மிக்கவர்களாக வாழ வழிவகுக்கும். உலகில் சிறந்த கல்வியை வழங்கும் முன்னிலை நாடான பின்லாந்து மாணவர்களுக்கு இடைநிலைக்கல்வியில் மூன்றுவருட தொழில்சார்சார் திறன் விருத்திக்கல்வி வழங்கப்படுவதும் இந்தியாவில் மகாத்மா காந்தியின் வார்தாக்கல்வி முறையில் இடம்பெறும் தொழில் மையக்கல்வியை (Craft-centric education) அடிப்படையாகக்கொண்ட கல்விச்செயற்பாட்டை மேற்கொள்வதும் பாடசாலைக்கல்வியில் தொழில்சார் திறன்விருத்திக்கல்வியின் முக்கியத்துவத்தை புலப்படுத்துகின்றது.
இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் 1893 இல் தொழில்கல்விமுறை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் புகையிரத மற்றும் தேயிலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களை பயிற்றுவித்தலை பிரதான நோக்கமாகக் கொண்டது. நீண்டதொரு கல்வி வரலாற்றை கொண்ட இலங்கை பொதுக் கல்விக்கட்டமைப்பானது தொழில்கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இலங்கையில் தொழில்கல்வி வரலாற்றில் 1893 இல் ஆரம்பிக்கப்பட்ட மருதானை தொழிநுட்பக்கல்லூரி தொழில்கல்வியை முறையாக வழங்குவதற்கு ஆரம்பிக்கப்பட்ட முதல் கல்லூரியாக விளங்குகின்றது. பாடசாலைக்கல்வி கட்டமைப்பில் தொழில்சார் திறன்களின் விருத்தி பிரித்தானியர் ஆட்சியிலும் பின்னர் சுதந்திரத்திற்கு பின்னரும் முக்கிய வளர்ச்சியைப் பெற்றுக்காணப்படுகின்றது. குறிப்hக 1981 இல் முன்வைக்கப்பட்ட கல்விச்சீர்திருத்தத்தில் வெள்ளை அறிக்கையின் பிரதான கருப்பொருளாக விளங்கியது மாணவர் தொழில்சார் திறன்களின் விருத்தியாகும். இதன் ஓர் பிரதிபலிப்பே பாடசாலைக்கலைத்திட்டத்தில் வாழ்க்கைத்தேர்ச்சி (Life skill) என்ற பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பாடசாலைக்கல்விக்கட்டமைப்பில் தொழிநுட்பபாடங்களானது 1930 இல் இருந்து வெவ்வேறு பெயர்கள் மற்றும் வடிவங்களில் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டு வந்துள்ளன அவற்றுள் வெடகுருவ, முன்தொழிற்கல்வி பாடநெறிகள், வாழ்க்கைத்திறன் அத்துடன் செயற்பாட்டு அறை போன்றன முக்கியமானவையாகும். மற்றைய முன்னெடுப்பாக செய்முறை மற்றும் தொழிநுட்பதிறன்களாக (PTS) 2007 இல் பொதுக்கல்விமுறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ் தொழிநுட்ப பாடங்கள் 6-11 வரையான வகுப்புக்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. PTS ஆனது தொழிநுட்பக்கல்வியின் ஐந்து பரந்த விடயங்களை உள்ளடக்கியுள்ளது. அவையாவன அடிப்படை தொழிநுட்பம், உணவுத்தொழிநுட்பம், ஆடைத்தொழிநுட்பம், விவசாயத்தொழிநுட்பம் மற்றும் வியாபார செயற்பாடுகள் என்பனவாகும். இவ் ஐந்து பிரிவுகளிலும் ICT உள்ளடக்கப்பட்டுள்ளது. PTS மூலமாக விசேடமாக மாணவர்களிடத்தில் பிரச்சினை தீர்க்கும் திறன்கள், தொடர்பாடல் திறன்கள், சிந்திக்கும் திறன்கள் விருத்தி செய்யப்பட்டன.
மேலும் பாடசாலைக்கட்டமைப்பில் ஒன்பது தொழிநுட்ப பாடநெறிகள் தரம் 10-11 மாணவர்களுக்கு மூன்றாவது கூடையாக (Technical basket) அறிமுகம் செய்யப்பட்டு அதனுள் மாணவர்கள் ஒன்றை தெரிவ செய்தல் வேண்டும். அப்பாட நெறிகளாவன வடிவமைப்பு மற்றும் கட்டுமான தொழிநுட்பவியல், வடிவமைப்பு மற்றும் இயந்திரவியல் தொழிநுட்பவியல், வடிவமைப்பு மின்னியல் மற்றும் இலத்திரனியல் தொழிநுட்பவியல், கலை மற்றும் கைவினை, விவசாயம் மற்றும் உணவுத்தொழிநுட்பம், நீர்வாழ் உயிர்வள தொழிநுட்பவியல், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பவியல், வீட்டுப்பொருளியல் மற்றும் சுகாதாரம் மற்றம் உடற்கல்வி என்பனவாகும்.
தேசியகல்வி ஆணைக்குழுவின் 2009 இல் முன்வைக்கப்பட்ட அறிக்கை மற்றும் 2012 இல் மனித உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்பு அறிக்கை ஆகிய இரண்டும் பொதுக்கல்வித்துறையில் தொழில்சார் திறன்களின் விருத்தி தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தன. குறிப்பாக பொதுக்கல்வி மற்றும் தொழிநுட்ப மற்றும் தொழிற்கல்வி அத்துடன் பயிற்சி (TVET) ஆகியவற்றுடன் தொடர்பினைப்பேணல், பொதுக்கல்வியின் ஒவ்வொரு வெளியேறு மட்டங்களிலும் வெவ்வேறு தொழிற்கல்வி முறைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தல்இ கா. பொ.த சாதாரண தரத்தில் NVQ-1 இனை அறிமுகம்செய்தல், UNIVOTEC மூலமாக பாடசாலைகளில் தொழில்சார் திறன் விருத்திப்பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர்களை தயார் செய்தல் போன்றனவாகும்.
இலங்கை பாடசாலைக்கல்வியில் தொழில்கல்வியை வழங்கும் முயற்சியாக தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப்பிரிவு 1957 சுற்றறிக்கை இல 10 இன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 1970 ஆரம்பம் முதல் அதன் செயற்பாடு சரியாக இடம்பெறவில்லை. கல்வி அமைச்சு 1985 இல் தேசிய இளைஞர் சேவைமன்றத்தடன் இணைந்து தொழில் வழிகாட்டல் சேவையை ஓர் முன்னோட்ட நிகழ்ச்சித்திட்டமாக பாடசாலைகளில் அறிமுகப்படுத்தியது. இருந்தபோதிலும் இலங்கை பாடசாலைக்கடடமைப்பில் தொழில் வழிகாடடல் சேவையானது முழுமையானவகையில் சுற்றறிக்கை இலக்கம் 16/2006 அத்துடன் 06/2013 க்கு இணங்க கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டது. “பாடசாலை வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சித்திட்டம்” என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பொதுவான வழிகாட்டல் ஆலோசனையுடன் எதிர்கால தொழிற்சந்தைக்கு ஏற்றவகையில் மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது பிரதான நோக்கமாக காணப்பட்டது. இங்கு பெற்றோர்களுக்கும் மாணவர்களின் தொழில் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
பதிமூன்று வருடகால சான்றளிக்கப்பபட்ட கல்வித்திட்டம்
மாணவர்களிடத்தில் தொழில்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விசார் செயற்திட்டமே பதிமூன்று வருடகால சான்றளிக்கப்பபட்ட கல்வித்திட்டமாகும். “இலவசக்கல்வியில் தொழில்சார் திருப்புமுனை” ( Professional turning point in free education) என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டது. கா. பொ.த சாதாரணதரத்தில் உயர்பெறுபேறுகளை பெறாத மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்விசார் வாய்ப்பினை வழங்கும் செயன்முறையாகும். இத்திட்டமானது அறிவுசார் பொருளாதாரத்திறன் அடிப்படையில் உற்பத்தி, ஆக்கத்திறன் என்பவற்றில் உயிர்ப்பான பங்குபற்றலுக்ககாக இளைஞர்களை தயார்படுத்தும் திட்டமாகும். பரீட்சார்த்தமாக 42 பாடசாலைகளில் நடைமுறைபபடுத்தப்பட்டு இன்று அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்த கல்வியமைச்சு செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.
பதிமூன்றுவருட உத்தரவாதக்கல்வி மூன்று பிரதான இலக்குகளை அடிப்படையாகக்கொண்டுள்ளது 1. அறிவு, திறன், மனப்பாங்கு விருத்தி 2. தொழிநுட்ப, தொழிற்துறை, சமூகத்திறன்களின் மேம்பாடு 3. சுய அபிப்பிராயம் மற்றும் ஆளுமை விருத்தி என்பனவாகும். தொழில்சார் திறன் விருத்தி அடிப்படையில் 26 தொழில் முறைப்பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன அவற்றுள் உணவுபதப்படுத்தல் கல்வி, நீர்வளங்கல், உலோகக்கட்டுமான கல்வி, மென்பொருள் அபிவிருத்தி, அலுமினியம் கட்டுமானக்கல்வி அத்துடன் தோட்டக்கலை முதலான பாடங்களாகும்.
தொழில்கல்வியினூடான மாணவர் விருத்தி
“தொழில்சார் திறன்களின் விருத்தியானது மாணவர்களிடத்தில் அவர்களது தனித்தன்மைவாய்ந்த திறன்களை பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதனால் அவர்களிடத்தில் தன்னம்பிக்கை, தலைமைத்துவத்திறன்கள் கட்டியேழுப்பப்படுகின்றன” என்ற Conrad Burns என்பவரின் கருத்து தொழில்சார் திறன்களினூடான மாணவர் விருத்தியை பறைசாற்றுகின்றது. அந்தவகையில் புதிய வேலை உலகிற்கு ஏற்றவகையில் மாணவர்களை சமூகத்திற்கு வழங்குதல்இ மாணவர்களிடத்தில் காணப்படும் ஆற்றலை வெளிக்கொண்டு வரவும் தொழில்சார் திறன்களின் விருத்திக்கல்வி உதவுகின்றது. புத்தாக்க சிந்தனைமிக்க மாணவர் சமூதாயத்ததை கட்டியெழுப்புவதற்கும், உயர்கல்வி வாய்ப்பை பெறாதவர்களுக்கு கல்வி வழங்கி அவர்களை திறன்மிக்கவர்காக உருவாக்குவதற்கும் உதவுகின்றது. இன்று எமது நாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையான வேலையில்லாப்பிரச்சினைக்கு தீர்வாக மாணவர்களிடத்தில் தொழில்துறைசார் திறன்விருத்தியை ஏற்படுத்துகின்றமையும் தொழில்சார் திறன் விருத்திக்கல்வியினால் ஏற்படுகின்ற முக்கிய மாற்றங்களாகும்.
பாடசாலைக்கல்வியில் தொழில்கல்விசார் பிரச்சினைகள்
இலங்கை பாடசாலைக்கட்டமைப்பு தொழில்கல்விசார் முன்னெடுப்புக்களை பல்வேறுபட்டவகையில் மேற்கொண்டபோதிலும் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளும் காணப்படுகின்றன. தொழில்சார் திறன் விருத்தி நோக்கத்தின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடங்கள் சில மாணவர்களின் தொழில்சார் திறன்விருத்திக்கு ஏற்புடையதாக அமையவில்லை. உதாரணமாக சுகாதாரமும் உடற்கல்வியும் பாடநெறியானது மாணவர்களிடத்தில் தொழில்சார்திறன்களுக்கான வாய்ப்புக்களை குறைந்த அளவிலே வழங்குகின்றது.
மேலும் வளங்களின் சமனற்ற பரம்பலானது பெற்றுக்கொள்ளும் கலவியின் தரம் தொடர்பாக நடைமுறைசார் பிரச்சினைகளை ஏற்படுத்தகின்றது. 2013 இல் உயர்தரத்தில் அறிமுகப்படத்தப்பட்ட தொழிநுட்ப துறைக்கு அரசாங்கம் 251 பாடசாலைகளுக்கு உபகரணங்களுடன்கூடிய தொழிநுட்ப ஆய்வுகூடங்களை வழங்கியது. 35 பாடசாலைகளில் ஆய்வுகூட வசதிகள் உள்ளபோதிலும் உபகரணங்களில்லை அத்துடன் ஏனைய 94 பாடசாலைகளில் ஆய்வுகூடம் மற்றும் உபகரணங்களின் வசதியற்றநிலை காணப்படகின்றது. பாடசாலை ஆசிரியர் நியமனங்களும் ஏற்றத்தாழ்வுகளை கொண்டுள்ளன.
முடிவுரை
ஆகவே இலங்கை பாடசாலைக்கல்விக்கட்டமைப்பில் மாணவர்களிடத்தில் தொழில்சார் திறன்களின் விருத்தியை ஏற்படுத்தி வேலையுலகிற்கு ஏற்ப மாணவர்களை மாற்றியமைப்பதற்கு தொழில்கல்வியினை பொதுக்கல்வியுடன் இணைந்தவகையில் வழங்க பல்வேறுபட்ட முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுவதனை நாம் நோக்கமுடியும்.
உசாத்துணைகள்
Director, University College of Batangala, (2018, Sebtember 10). Vocational Education and Training: A feasible alternative for Sri Lanka. Daily mirror, Retrieved from http://www.dailymirror.lk/article/Vocational-Education-and-Training-A-feasible-alternative-for-Sri-Lanka-155251.html
National Education Commision, (2018). National Policy on Technical and Vocational Education, Retrieved from http://nec.gov.lk/national-policy-on-technical-and-vocational-education-2018-2/
Inayathulla, H. (2017, August 27). Mandatory 13 year education policy mooted. SUNDAYOBSERVER,Retrievedfromhttp://www.sundayobserver.lk/2017/08/27/features/mandatory-13-year-education-policy-mooted
ர.விவேகானந்தராசா (B.Ed(EUSL), HNDE (SLIATE), DiTech(ESOFT), M.Phil-PhD (Reading - University of Colombo)
விரிவுரையாளர்
கல்விப்பீடம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
No comments