சுந்தரர் - வரலாறு
சுந்தரர்
முன்னுரை
“தேவார மூவர்” என்று சிறப்பிக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோருள் இறைவனைத் தோழமை உணர்வோடு திருப்பாட்டுக்கள் பாடிய வகையில் தமிழிசை உலகில் சிறப்பிடம் பெறுபவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளாவார்.
பிறப்பு
திருமுனைப்பாடி நாட்டுத் திருநாவலூரில் ஆதி சைவ குலத்தில் சடையனாருக்கும், இசைஞானியாருக்கும் கி.பி 694இல் மகனாகப் பிறந்தார் எனக் கூறப்படுகிறது. இவர் நம்பி ஆரூரர் என்றும் வழங்கப்படுகிறார். இவரை அந்நாட்டு அரசன் நரசிங்க முனையரையன் என்பவர் தத்தெடுத்துக் கொண்டார். பல கலைகளில் தேர்ச்சி பெற்று திருவெண்ணெய் நல்லூரில் வளர்ந்து வந்தார்.
இறைவன் தடுத்தாட் கொள்ளல்
திருமண வயது வந்தபோது இவருக்கு புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் மகளோடு உறுதி செய்யப்பட்டு திருமண ஏற்பாடு நடந்தது. அப்பொழுது சிவபெருமான் முதிய அந்தணர் உருவில் திருமணப் பந்தலில் தோன்றி “ஆரூரான் என் அடிமை” எனக்கும் அவருக்கும் ஒரு பெரும் வழக்குண்டு. அவ்வழக்குத் தீர்ந்தாலன்றி திருமணம் நடக்கக்கூடாது என்று திருமணத்தைத் தடுத்தார். அப்பொழுது சுந்தரர், “ஓர் அந்தணர் மற்றோர் அந்தணருக்கு அடிமையாதல் எவ்வாறு?” என்று எள்ளி நகையாடினார். அவ்வாறு இருந்தால் அதற்கு ஆதாரமாக தம் முன்னோர் எழுதித் தந்த அடிமையோலையைக் காட்டும்படி கூறினார். “அடிமைத் தொழில் செய்வதற்குரிய நீ ஓலையைப் பார்க்க உரியவன் அல்லன்” என்று அந்தணர் கூற சுந்தரர் அந்தணர் கையிலிருந்த ஓலையைப் பிடுங்கிக் கிழித்தெறிந்தார். இதனால் ஊர்ச்சபை கூட்டப்பட்டது. அவையின் முன் தத்தம் வழக்கைக் கூற, அவையினர் முதலில் நம்பவில்லை. பிறகு முதியவர், “இவன் கிழித்தது மூல வோலையின் படி, மூல ஓலை இதோ இருக்கிறது” என்று காட்டவும், அவையினர் சுந்தரர் அம்முதியவருக்கு அடிமையாக ஏவல் செய்யவேண்டும் என்று தீர்ப்பளித்தனர். சுந்தரர் முதியவரை நோக்கி, “ஓலையில் நீர் திருவெண்ணெய் நல்லூர் என்னும் இவ்வூரைச் சேர்ந்தவர் என்று குறித்துள்ளது. உம்முடைய இருப்பிடம் எது?” என்று கேட்க, “ஒருவரும் அறியீரோ?” என்று சொல்லி முதியவர், சுந்தரரையும் மற்றவர்களையும் அழைத்துச் சென்று திருவருட்டுறை என்னும் கோயிலின் உள்ளே சென்று மறைந்தார். அனைவரும் சிவபெருமானே முதியவர் வேடத்தில் வந்து சுந்தரரை ஆட்கொண்டவர் என்பதறிந்து வியந்தனர்.
சிவபெருமான் இடப வாகனத்தின் மேல் எழுந்தருள ஆரூரருக்குக் காட்சி தந்து, நீ முன்பே நமக்குத் தொண்டன்; துன்பமிக்க வாழ்க்கையோடுள்ள தொடர்பினை அறுப்பதற்காக முதியவர் வேடத்தில் வந்து உம்மைத் தடுத்தாட் கொண்டோம். “நம்மை வன்மை பேசினமையால் நீ வன் தொண்டன் என்ற பெயருக்கு உரியாய்; நமக்கு அர்ச்சனைப் பாட்டாகத் தமிழ்ப் பதிகங்கள் பாடுவாயாக என்று அருளினார். ஆரூரர், நாம் “எம்பெருமானைப் பாடுமாறு அறியேனே” “என உரைக்க, “நம்மைப் பித்தன்” என்றாய், அதையே வைத்துப் பாடுக என்று இறைவன் அருள, “பித்தா பிறைசூடி” என்ற முதல் திருப்பதிகத்தை இந்தளப் பண்ணில் அமைத்துப் பாடினார்.
சுந்தரர் தமது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்த இந்நிகழ்ச்சியினைத் தொடர்ந்து சிவபெருமானைத் தொழுவதே தமது தொண்டெனக் கருதி, திருத்துறையூர், திருநாவலூர், சிதம்பரம் முதலான பல திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப் புகழ்ந்துப் பாடினார். தம் பாடல்களில் இறைவனைத் தோழமை உணர்வுடன் கடிந்தும் பாடியுள்ளார். இவ்வாறான பாடல்களே “நிந்தாஸ்துதி கீர்த்தனைகள் “ என்ற இசைப் பாடல் வகைப்பாட்டுக்கு ஆதாரமாகத் திகழ்ந்துள்ளன.
சுந்தரர் வாழ்க்கையில் அற்புத நிகழ்வுகள்
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்று சுந்தரர் வாழ்க்கையிலும் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.
1. திருவாரூரில் - இறைவன் திருவருளால் நெல் மலையும் அவற்றை பரவையார் வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்குரிய ஆட்களையும் தருவித்தமை.
2. திருக்கருகாவூரில்- வெயிலின் கொடுமையைத் தணித்தற் பொருட்டு ஒரு குளிர்ந்த பந்தல் உருவானது. சுந்தரருக்கு உணவும் தண்ணீரும் சிவபெருமானே அந்தணர் வடிவம் கொண்டு கொடுத்தமை.
3. திருப்புகலூரில் - தலைக்கு அணையாக வைக்கப்பட்டிருந்த செங்கற்கள் எல்லாம் இறைவன் அருளால் பொன் கட்டிகளாக மாறியமை.
4. திரு ஆரூரில் - சிவபெருமான் தம்முடைய கண்களைப் பறித்த தோடல்லாமல், தமக்கு மற்றொரு கண்ணைத் தருவதைத் தாமதப்படுத்துகின்றாரே என்று தோழமை உணர்வுடன் இறைவனை “வாழ்ந்து போதிரே” என்று கடிந்துக் கொள்கிறார். இறுதிப் பாடலாக, “கார் ஊர் கண்டத்து” எனத் தொடங்கும் பாடலைப் பாடிய அளவில் இறைவன் சுந்தரருக்கு மற்றொரு கண்ணையும் தந்து அருளினார்.
மணவாழ்க்கை
திருவாரூரில் பரவை நாச்சியாரைக் கண்ட சுந்தரர் அவரைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். அதே போன்று திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் கண்டு அவர் மீதும் அன்பு கொண்டு அவரையும் தமது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். பின்னர் ஊழ்வினைக் காரணமாகத் தம் இரு கண்களின் பார்வையையும் இழந்தார். திருமுல்லைவாயில், திருவெண்பாக்கம் ஆகிய தலங்களில் சென்று இறைவனைத் துதித்துப் பாட அவரது இடது கண் ஒளி பெற்றது. பின் திருவாரூர் சென்று இறைவனைப் பாடும் போது அவரது வலது கண்ணும் ஒளி பெற்றது.
சுந்தரரின் குடும்ப உணர்வு
சுந்தரர் கோட்புலி நாயனாரின் ஊராகிய திருநாட்டியத்தான் குடி என்ற ஊரை நெருங்கிய போது, கோட்புலி நாயனார் சுந்தரரை எதிர் கொண்டழைத்து அவரைத் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று அமுது படைத்தார். சிங்கடியார், வனப்பகையார் என்னும் தம் இரு புதல்வியரை அழைத்துச் சுந்தரரின் திருவடிகளைத் தொழும்படி கூறினார். சுந்தரர் அவர்கள் இருவரும் தமக்கு நற்புதல்வியர் என்று கூறி தமது மடி மீது வைத்துத் தூய அன்புள்ளத்தோடு அவர்களை உச்சி முகர்ந்து அவர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தார். தம் பாடல்களிலும் சுந்தரர் தம்மை, “சிங்கடி அப்பன்” என்றும் “வனப்பகை அவள் அப்பன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருவாரூரில் பரவையாருக்கும் சுந்தரருக்கும் ஏற்பட்ட ஊடலின் போது இறைவனே பரவையார் வீட்டிற்குத் தூது சென்று சமாதானம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது. ஒரு பெண்ணிற்காக, சுந்தரர் இறைவனை தூது அனுப்பினார் என்று, திருப்பெருமங்கலம் ஏயர்கோன் என்னும் கலிக்காம நாயனார் வெகுண்டெழுந்தார். கலிக்காமரின் சினத்தைத் தணிக்க, இறைவன் கலிக்காமருக்குச் சூலை நோயைத் தந்தார் என்றும் அதனைத் தீர்க்கச் சென்ற சுந்தரரைக் காண விரும்பாத கலிக்காமர் தம் வயிற்றைக் கிழித்து உயிர் நீத்தார் என்றும் கூறப்படுகிறது. அதைக் கண்ட சுந்தரர் துடித்துப் போய் தானும் உயிர் துறக்க முற்பட்ட போது சிவபெருமான் தடுத்து, கலிக்காமரை மீண்டும் உயிர் பெறச் செய்தார் என்றும் பிறகு சுந்தரரும் கலிக்காமரும் நண்பர்களாயினர் என்றும் சொல்லப்படுகிறது.
கயிலை அடைதல்
சுந்தரர் தம்முடைய நண்பராகிய சேர மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க வஞ்சி மாநகர் அடைந்து அங்கு சில நாட்கள் தங்கி இறைவனை வணங்கி இருந்தார். ஒரு நாள் சேர மன்னர் நீராட சென்றிருந்தபோது சுந்தரர் திருக்கயிலைக்கு மீளும் நாள் வந்ததாகக் கண்டு திருவஞ்சைக்களத்துக் கோயிலைப் பணிந்து இறைவன் திருவடிகளைப் போற்றி இவ்வுலகின் பாச வாழ்க்கையை அறுத்திட வேண்டினார். கயிலைநாதர் வெள்ளானை மீது சுந்தரரை ஏற்றிக் கொண்டு வருமாறு அயன் முதலிய தேவர்க்குக் கட்டளையிட அவ்வாறே அவர்கள் திருவஞ்சைக்களத்துக் கோயிலின் முன் நின்ற நம்பி ஆரூரர்க்கு இறைவனின் கட்டளையை அறிவித்தனர். சுந்தரரும் அதனை ஏற்றுக்கொள்ள விண்ணவர் அவரை வெள்ளை யானை மேலேற்றி ஐவகை நாத மொலிப்ப அழைத்துச் சென்றனர்.
No comments