கேட்டல், வாசித்தல் திறன்களை வளர்க்கும் வழிமுறைகள்
அறிமுகம்
மனித எண்ணங்களையும், உணர்வுகளையும் எடுத்துச் சென்று, வெளிப்படுத்தும் கருவியாக மொழியமைகிறது. மனிதன் முதலில் மொழியில் ஒழுங்கில்லாமல் தான் பேசிக்கொண்டு இருந்தான். காலப்போக்கில் அவன் மதி நுட்பத்திற்கேற்ப அவனைத் திருத்திக்கொண்டு மற்றவர்களுக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் முயற்சியில் இறங்கினான்.
கற்பதும், அதனைச் சொல்லிக்காட்டுவதும் வேத காலம் தொடங்கியே ஏற்பட்டுவிட்டது. எந்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? தவறுதலாக உச்சரித்தால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை நமக்கு வேதங்கள் தெளிவுபடுத்துகின்றன.
கற்றல் கற்பித்தல்
ஒரு விடயத்தை சரியாக விளங்கி புரிந்து கொள்வதற்கு, கற்றல் கற்பித்தல் நிலையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையேயுள்ள உறவு நிலையை உபநிடதங்கள் கூறுகின்றன. கற்றல் கற்பித்தலில் முக்கிய பங்குவகிப்பவர்கள் மாணவரும் ஆசிரியருமே. எனவே கற்பித்தலை எளிமையாக்குவதின் மூலம் மாணவர்களின் திறன்களை எவ்வாறு வெளிக்கொணர முடியும்.
கேட்டல் திறன்
நான்கு வகைத் திறன்களில் கேட்டல் திறனே மிகவும் இன்றியமையாத திறனாகும். இதனையேத் திருவள்ளுவர்,
"செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" (குறள்: 157)
என்று குறிப்பிடுகிறார். ஒன்றைப் படித்துத் தெளிவதைவிட கேட்டு தெளிவதே பயனுள்ளதாக இருக்கும். குழந்தை வயிற்றில் இருக்கும்போதே கேட்கும் திறனைப் பெற்றுவிடுகிறது. அந்தக் குழந்தை பேசுவதற்கு வேண்டுமேயானால் நாட்கள் ஆகுமே தவிர அதுவரை கேட்டல் என்ற ஒரு திறனை அது வளர்த்துக்கொண்டேதான் வரும். "ஆசிரியர் பேசும்போது மாணவர் கேட்கின்றனர். கேட்கின்றவர் எல்லோரும் மிகக் கவனமுடன் அல்லது கூர்மையுடன் கேட்பதாகச் சொல்ல இயலாது. ஏனெனில் ஆசிரியர் பேச்சின் கருத்து மிகக் கடினமானதாக அல்லது பேசப்படும் பொருள் மாணவர்களின் அனுபவத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். எனவே கேட்பவரின் திறன் மாறுபட இடமுண்டு. அதோடு அறிவாற்றலுக்கு ஏற்பக் கேட்கும் திறனிலும் வேறுபாடு உண்டு".
அறிவு வளர்ச்சிக்கு கேட்கும் திறன்
பிறர் படிக்கும் போதும் பேசும்போதும் என்ன என்பதை செவிமடுத்து ஒருவர் கேட்க முற்படும்போது அதுவே அவரின் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாகும். எனவே இராமலிங்க வள்ளலார் படித்தாலும் படிக்கப் பக்க நின்று கேட்டாலும் இனிப்பவன் இறைவன் என்கிறார். ஆசிரியர்கள் வாசிக்கும் போது மாணவனைத் தன்வயப்படுத்தி எளிமையான சொற்களைச் சொல்லும்போது அவன் செவிமடுத்து கேட்பான். மாணவரின் புரிதல் திறனுக்கேற்ப பாடல்கள் பாடியோ அல்லது ஒரு சொல் சொல்லி அதற்கு எதிர்ச்சொல் என்னவாக இருக்கும் என மாணவனை யூகிக்க வைக்கவேண்டும்.
கேட்டல் திறனின் இன்றியமையாமை
ஆசிரியர் மாணவர்களுக்கிடையே ஒரு தொடர்ச்சி சங்கிலிப் பிணைப்பு இருந்தால் தான் கேட்டல் திறன் முழுமைப்பெறும் என்பதில் ஐயமில்லை. டாக்டர் எம்.எஸ். திருமலை கேட்கும் திறன் என்பது தனிப்பட்டவர்களின் மனநிலை, விருப்பு, வெறுப்பு, ஆர்வம் ஆகியவற்றைப் பொறுத்தும், தனிப்பட்டவர்களின் திறமை, அவர்களின் உடல், மனநிலையில் உள்ள குறைபாட்டைப் பொறுத்தும் உள்ளது என்கிறார். நல்ல மாணவனாக ஒருவன் திகழ்வதற்கு கேட்டல் திறனே முதல்படியாக அமைகிறது என்பது ஆய்வாளர்களின் ஒருங்கிணைந்த கருத்தாக அமைகின்றது.
வாசித்தல் பழக்கம்
பாடத்திட்டத்தில் உள்ள பாடப்புத்தகத்தை மட்டும் படிக்கும் மாணவனை மற்றப் புத்தகங்களையும் படிக்க வைப்பதற்கு தூண்டுகோலாக ஆசிரியர் விளங்க வேண்டும். கதைப்புத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவற்றை வாசிப்பதற்கு ஆர்வங்காட்டுவதால் மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்வதோடு, பிழையின்றி வாசிக்கவும், எழுதவும் முடிகிறது.
வாசிப்புத் திறனை அதிகரிக்கும் முறை
தினந்தோறும் வகுப்பிலேயே ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி இன்றையச் செய்திகளை வாசிக்க வைக்கும்போது மாணவர்களிடையே ஒரு உந்துதல் ஏற்பட்டு அவனைவிட நாம் நன்றாக வாசிக்க வேண்டும் என்று அறிவுப்போட்டி ஏற்படும். வாசித்தலின் போதே ஆசிரியர் எந்த இடத்தில் ஏற்றி இறக்கி வாசிக்க வேண்டும் என்று சொல்லும்போது மாணவரின் மனதிலும் நன்றாகப் பதியும். வாசிக்கும்போது சந்திப்பிழை, ஒற்று மிகுதல் ஒற்று மிகாதல் பேன்ற இலக்கண குறிப்புகளையும் ஆசிரியர் சொல்லிக் கொண்டே வந்தால் நாளடைவில் மாணவன் பிழையின்றி வாசிக்கவும் அதன்மூலம் எழுதவும் முடியும். நூல் வாசிக்கும் பழக்கம் இல்லையெனில் அவர்களது அறிவை விரிவுபடுத்த முடியாது. ஏதாவது ஒரு தலைப்பில் கட்டுரை எழுதச் சொன்னால் அவர்கள் வார்த்தையைத் தேடுவர். அவர்களிடத்தில் சொல்லாட்சித்திறன் இல்லாமல் போய்விடும்.
மேலும், மாணவர்களிடத்தில் சொல் வளத்தைப் பெருக்குவதற்கு அவர்களுக்கு பிடித்தமான கதையைச் சொல்லி அதன் பின்பு அக்கதையின் சுருக்கத்தை எழுதச் சொல்லும்போது அவனுடைய சொந்த முயற்சி வெளிப்படும். எனவே ஆசிரியர் வாசித்தல் பழக்கத்தை ஏற்படுத்தும் போது சிறந்த மாணவனை உருவாக்க முடியும்.
முடிவுரை
கொவிட் 19 இற்குபின் மாணவர்களின் கேட்டல் ,வாசிப்புத் திறன் உள்ள மாணவர்களே தனது உருவாக்கச் சிந்தனையை மேம்ப்படுத்தி, கல்வி அடைவை வெளிக்காட்டலாம்.
இத்திறன்களை பல்வேறு உத்திகள் மூலம் மேம்படுத்துவதன் அவசியம் தற்போது மேலும் உணரப்படுகின்றது
உசாவியவைகள்:
- Net... Muththumani)
- Tamil Language Teaching Method ( pgde.)
கிண்ணியா ஆர்.சதாத்
No comments