News

தமிழறிஞர் விபுலானந்தர்

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.
காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.
பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.”
தமிழறிஞர் விபுலானந்தர்ஈழத்தின் கிழக்குக் கோடியில் காரைதீவு என்ற சிற்றூரிலே 1892 ஆம் ஆண்டு பிறந்த மயில்வாகனம், தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞர் விபுலாநந்தராக மாறியமைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி அவரது மனுக்குல நேசிப்பும் காரணமாகும். அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, விளங்கிய விபுலானந்தர், சமூகத்துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும், தமிழிற்காற்றிய செவைகளும் அவரை என்றும் நிலைக்கச் செய்வன.
தமது ஐந்தாம் வயதில் காரை தீவு நல்லரத்தன ஆசிரியரால் எழுத்தறிவிக்கப்பெற்ற மயில்வாகனம், 10 வது வயதில் கல்முனை மெதடிஸ்ட் பாடசாலைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் மட்டக்களப்பு செயின்ற் மைக்கேல் உயர்தர ஆங்கில பள்ளியில் கல்வி கற்று வருகையில் தனது கணித நுட்பத்தினால் ஆசிரியரையே வியப்படையச் செய்தார். தனது 16 வது வயதில் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் முதலாவது வரிசையில் தேர்ச்சி பெற்று, 1911 ஆம் ஆண்டு கொழும்பு சென்று ஆங்கில ஆசிரியர் பயிற்சிக்கழகத்திற் சேர்ந்து ஆசிரியப் பட்டம் பெற்றார். பயிற்சிக்கழகத்தில் இருக்கும் காலையில் உயர்தரத் தமிழாராய்ச்சியிலும் கருத்துச் செலுத்திய இவர் கொழும்பில் தமிழறிஞர்களாக விளங்கிய தென் கோவை கந்தையாப்பிள்ளை ஆகியோரிடம் தமிழிலக்கண இலக்கியம் கற்றார். 1916 ஆம் ஆண்டு விஞ்ஞானக் கலையில் டிப்ளோமா பெற்றார். மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றதும் இவ்வாண்டிலே தான். பின்னர் யாழ்ப்பாணம் சம். பத்தரிசியார் உயர்தரக் கலாசாலையில் விஞ்ஞான ஆசிரியராக இருக்கையில், லண்டன் பல்கலைக் கழக பி.எஸ்.ஸி பட்டதாரியானார். அடிகளார் 1931 ஆம் ஆண்டில் தமிழ் நாடு சென்று, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மூன்றாண்டுகள் தொண்டு புரிந்தார். பின்னர் ஈழநாடு திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக அமர்ந்தார் ( பண்டிதமணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை -1963)
அடிகளாரின் சமூகப் பணி
வித்தகர் விபுலாநந்த அடிகளாரின் பன்முகப்பட்ட பணிகளில் சமூகத்துறவியாக அவர் வாழ்ந்து செய்த தொண்டுகள் அளப்பரியவை. அவர் மக்களைத் துறந்து, மக்களை விட்டு விலகித் துறவறம் பூணவில்லை. மக்களிடையே துறவியாக வாழ்ந்து சமூகத்தின் துயரங்களிலும், மகிழ்ச்சிகளிலும் பங்கேற்றார். யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளின் பழக்கம், துறவுள்ளம் படைத்த மயில்வாகனத்தை விபுலானந்த அடிகளாக்கியது. 1922 இல் சென்னை சிறீ இராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்து, காவி பூண்டு இராமகிருஷ்ண மடத்துத் தலைவர் சுவாமி சிவானந்தரிடம் பிரம்மாச்சாரி அபிஷேகம் பெற்று “பிரபோத சைதன்யர்” என்னும் தீட்சா நாமமும் பெற்றார். அங்கு “இராமகிருஷ்ண விஜயம்” என்ற தமிழ்ச்சஞ்சிகைக்கும் “வேதாந்த கேசரி” என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். அத்தோடு “செந்தமிழ்” என்னும் பத்திரிகைக்கும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.
ஆச்சிரம வாழ்க்கை முடிந்து சுவாமி விபுலாநந்தர் என்னும் குருப்பட்டம் பெற்றார். குருவாக இருந்து அபிஷேகம் செய்தவர் சிறீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் நேர்ச்சீடர்களில் ஒருவரான சுவாமி சிவானந்தராவார். கல்லடி உப்போடையில் தாம் அமைத்த ஆங்கிலப் பாடசாலைக்கு சிவானந்த வித்தியாலயம் என நாமம் சூட்டியது இவரது ஞாபகார்த்தமாகவே.
தமிழறிஞர் விபுலானந்தர்அதன் பின் ஈழம் திரும்பி, அந்நியர் ஆதிக்கத்தில் மதம், மொழி, கலாசாரம் முதலியவற்றில் தமது தனித்துவ இயல்புகளை இழந்து கொண்டிருந்த தமிழினத்தைத் தட்டியெழுப்பும் முயற்சியிலீடுபட்டார். கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவினார். மட்டக்களப்பு உப்போடையில் சிவானந்த வித்தியாலயம் என்ற ஆண்கள் பாடசாலை, திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக்கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், என்பன அவர் நிறுவிய கல்வி நிறுவனங்களாகும். தலைநகர் கொழும்பில் தமிழ்ப்பள்ளிக்கூடம் இல்லாத குறையைப் போக்க விவேகானந்த வித்தியாலயத்தைத் தொடங்கினார். ஒரு சமூகத்துறவி நிறுவிய கல்விச் சாலைகள் அவை. அத்துடன் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் இராமகிருஷ்ண ஆச்சிரமங்களை நிறுவினார். விபுலாநந்தர் ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந்தார்.
நாம் மனிதர் என்னும் பெயருக்கு முழுதும் தகுதி பெற வேண்டுமானால், இன்று முதலே சன்மார்க்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும்” என்றார். “பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடனே தான் நல்ல நிலையை அடைய விரும்புவதே உண்மையான சன்மார்க்கமாகும்” என்றுமுரைத்தார்.
ஈழம் ஈன்றெடுத்த அறிஞர்களில் விபுலாநந்தர் முற்றிலும் வேறுபட்டவர். சாதி, மத, மொழி, இன ஏற்றத்தாழ்வுகளுக்கும், ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர். யாழ்ப்பாணத்தில் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும், பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியராகவும் 1917-1922 காலகட்டத்தில் கடமையாற்றியுள்ளார். கடமையொழிந்த வேளைகளில் வறுமையிலும், சாதியப் பாதிப்பாலும் நலிவுற்ற மக்களிடையே உலாவினார். அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். அதனால் “பெரியகோயில் வாத்தியார்” எனச் சாதாரண மக்களால் விரும்பி அழைக்கப்பட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய போது அவரது இந்த மனித நேய யாத்திரை இந்திய சேரிப்புறங்களில் பரிவோடு நிகழ்ந்தது. எனவே தான் சமூகத்திலிருந்து பிரிந்து தனித்து விபுலாநந்தர் நிற்கவில்லை. அவரது சிந்தனைகள் , நடத்தைகள் இரண்டும் அவரை ஏனைய அறிஞர்களினின்றும் வேறுபடுத்துவனவாகவுள்ளன.
தாய்மொழிக்கல்விக்கும் அறிவியற்கல்விக்கும் வித்திட்டவர்களில் விபுலாநந்தர் குறிப்பிடத்தக்கவர். ஆங்கில மொழிக்கல்வி ஆதிக்கம் பெற்றிருந்த ஒருகாலவேளையில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கி, அறிவியற்கல்வி தமிழிலும் போதிக்கவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார், அறிவியற் கலைச்சொல்லாக்கத் துறையில் ஈடுபாடு கொண்டு உழைத்துள்ளார். யாழ்ப்பாணம் வாலிப காங்கிரசுடனும் தாய்மொழிக் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் விபுலாநந்தர்.
6
மெல்பன் தமிழ்ச்சங்கம் விபுலாநந்த அடிகளாரின் 60 வது நினைவை முன் கூட்டியே நினைவு கூர்ந்து ஜூலை 21, 2006 ஆம் ஆண்டில் முத்திரை வெளியிட்டுக் கெளரவித்தது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
அடிகளாரின் இலக்கியப் பணி
சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்” என்று மூன்று தொகுப்பு நூல்கள் 1997 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்துள்ளன. இவற்றில் விபுலாநந்தரின் நூற்றி இருபத்தேழு (127) தமிழ் மொழி, ஆங்கில மொழிக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. அவரது ஆக்கங்கள் முழுவதும் தொகுக்கப்பட்டு விட்டன என்று சொல்ல முடியாவிட்டாலும், அனேகமானவை தொகுக்கப்பட்டு விட்டன என்று தொகுப்பசிரியர் உரையில் சொல்கிறார்கள் இப்பணியை மேற்கொண்ட வ. சிவசுப்பிரமணியம் மற்றும் சா.இ.கமலநாதன் ஆகியோர்.
“சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்” – தொகுதி-3 இல் ஆங்கில வாணி என்ற ஒரு கட்டுரை இருக்கின்றது. இது பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் மணிமலருக்காக 1941 ஆம் ஆண்டு எழுதப்பட்டு அந்த மலரில் வெளிவந்துள்ளது. “ஷேக்ஸ்பியரின் கவிதை வனப்பினை எடுத்துக் காட்டுவதற்காக அவரது நாடகங்களில் இருந்து சில காட்சிகளை மட்டும் மொழிபெயர்த்து இக்கட்டுரையிற் சேர்த்திருக்கிறார். ஷேக்ஸ்பியரின் கவி வனப்பினை மதங்க சூளாமணியில் சற்று விரிவாகக் கூறியிருக்கிறாம்” என்று விபுலாநந்தர் இக்கட்டுரையின் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். ஆங்கில வாணி என்பது ஆங்கில இலக்கியம் என்ற தலைப்பாக நாங்கள் எடுத்துக்கொள்ளலாம். மூன்று பகுதிகளாக இதில் இடம்பெறுகிறது.
(செ.க.சித்தனின் மே 22, 2006 வலைப்பதிவில் இருந்து)
அடிகளார் ஆக்கிய மதங்க சூளாமணி, நாடக இலக்கண அமைதி கூறும் ஒரு நூலாகும். 1924 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் “நாடகத் தமிழ்” என்ற உரையினைச் சங்கச் செயலாளராக இருந்த டி.சி.சீனிவாஸ ஐயங்கரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த “மதங்க சூளாமணி” என்ற நூலை எழுதினார்.
1937 ஆம் ஆண்டு இமய மலையைக் காணச் சென்று மலைச்சாரலில் உள்ள மாயாவதி ஆச்சிரமத்தில் தங்கினார். அங்கு சிலகாலம் “பிரபுத்த பாரதா” என்ற ஆங்கிலச் சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.
தமிழறிஞர் விபுலானந்தர்கனடாவில் வாழும் ஈழத்துப் பூராடனார் (க.தா. செல்வராசகோபால்) என்ற கவிஞர் 1983 ஆம் ஆண்டில் விபுலாந்த அடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் “விபுலாநந்தர் பிள்ளைத் தமிழ்” என்ற பிரபந்த நூலை வெளியிட்டிருக்கின்றார். அதில் நூலாசிரியர் ஈழத்துப் பூராடனார் விபுலானந்த அடிகளாரை நேரிற் காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லையாயினும், அவரது நேரடி வாரிசான புலவர்மணி. ஏ.பெரியதம்பிப் பிள்ளை அவர்களிடம் தமிழ் கற்றதும், அடிகளாரின் சகோதரியின் புதல்வன் திரு பூ.சுந்தரம்பிள்ளையுடன் உடன்சாலை மாணாக்கனாக நெருங்கிய நட்புக்கொண்டிருந்ததும் இந்த நூல் உருவாக்கத்திற்கு உசாத்துணையாக அமைந்ததாகக் கூறுகின்றார்.
அடிகளாரின் மதங்க சூளாமணியை ஆய்வு செய்து ஆய்வு செய்தும், மறு பதிப்பு செய்தும் அதன் கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு 800 வெண்பாக்கள் அடங்கிய கூத்தர் வெண்பா என்னும் நாடகத்தமிழ் இலக்கண நூல், மதங்க சூளாமணியின் இரண்டாவது பாகமான வடமொழி நாடகவியலின் தமிழாக்கத்தின் உரை நடையை விருத்தங்களாகச் செய்து கூத்தர் விருத்தம் ஆகிய நூல்களையும் செய்துமுடித்திருக்கின்றார் ஈழத்துப் பூராடனார்.
விபுலாநந்தர் பிள்ளைத் தமிழில் ஒவ்வொரு செய்யுட்களிலும்:
1. அடிகளாரின் வரலாறு
2. அடிகளாரின் தாயக வளம்
3. அவரின் போதனைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஈழத்துப் பூராடனார் இந்த விபுலானந்தர் பிள்ளைத் தமிழில் “நான் கண்ட விபுலாநந்த அடிகளார்” என்ற தலைப்பின் கீழ் இப்படித் தருகின்றார்.
மீன் பெண்ணுருவில் நீரரர்கள்
மீட்டு மிசையில் விளரிப்பண்
மிளிருஞ் சேதி விபுலானந்தர்
மிடையக் கேட்டேன் இளம் வயதில்
தேன் மது சொரியும் இலக்கியத்தின்
திகழுஞ் சுவைக்கோ ருரைப்பகுதித்
திரட்டா நமுரைநடைச் சிலம்பதிலே
திருவடி பொழிவதன் சுவைகண்டேன்
மான்கள் மருளும் மதர் விழி வாழ்
மட்டக்களப்பின் திருமகனை
மற்றும் நேரிற் கண்டிடாத
மருளிற் காலம் மடிய நின்றேன்
வான்மழை எனவவர் வருவார் ஓர் கால்
வந்தித் திடுவேன் எனவிருந்து
வள்ள லமரராய் ஆன பின்னே
வாய்த்ததி தருணம் வலிந்துருட்டே
தமிழறிஞர் விபுலானந்தர்கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தமிழ் மொழி இலக்கிய பாடத்திற்குத் தோற்றும் மாணவர்களுக்கு அருட்டிரு விபுலாநந்த அடிகளாரின் “கங்கையில் விடுத்த ஓலை” ஒரு பாடப் பகுதியாக இருந்தது. அந்தக் கவிதை நயத்தை மாணவர்களுக்கு உதவும் வகையில் பொழிப்பும், விளக்கமும் கொண்ட உபநூலை இலக்கிய வித்தகர் த.துரைசிங்கம் (உதவிக்கல்விப் பணிப்பாளர்) எழுதி சிறீ சுப்ரமணிய புத்தகசாலை வெளியீடாக அக்டோபர் 1991 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்நூலின் முகவுரையில் நூலாசிரியர் திரு த.துரைசிங்கம் அவர்கள் இவ்வாறு கூறிச் செல்கின்றார்.
அடிகளாரின் “கங்கையில் விடுத்த ஓலை” தனிச்சிறப்பு வாய்ந்தது. இமய மலைச் சாரலில் தவப்பள்ளியில் அடிகளார் வாழ்ந்த காலத்தில் அவரது இனிய நண்பர் கந்தசாமி மறைந்த செய்தியைக் கேள்வியுற்றார். அச்செய்தி அவரின் மனதைப் பெரிதும் வருத்திற்று. கந்தசாமிப் புலவனுடன் வேட்களத்தில் ஒன்றாகக் கல்வி பயின்ற காலை தாம் பெற்ற அனுபவங்களை எண்ணிப் பார்க்கின்றார். அவரது பழுத்த தமிழ்ப்புலமையும், தூய்மையான வாழ்வும், சிறந்த பண்புகளும் அடிகளாரின் உள்ளத்தில் எதிரொலிக்கின்றன. துயரம் மிகுகின்றது. உள்ளத்துணர்வு கட்டுமீறிப் பாடய்கின்றது கவிதை வடிவில். அதன் பேறாய்க் கங்கையில் விடுத்த ஓலை பிறக்கின்றது.
நெருங்கிய ஒருவர் இறந்தகாலை அவர்க்கிரங்கிப் பாடிய கையறு நிலைப் பாடல்கள் பலவற்றைச் சங்க இலக்கியங்களில் காண்கின்றோம். அதற்கமைய அடிகளாரின் “கங்கயில் விடுத்த ஓலை” புதுவகையில், புதுமெருகு பெற்றுத் திகழ்கின்றது. இது முற்று முழுதாகக் கையறு நிலைப் பாடலாக இல்லாவிடினும் அதன் சாயலில் எழுந்த தூதிலக்கியமாக அமைவதைக் காணமுடிகின்றது. முதல் இரு பாடல்களிலேயே அடிகளார் தமது நண்பனின் குண நலன்களை, பழுத்த தமிழ்ப் புலமையினை நினைவு கூருகின்றார்.
“எழுத்தறிந்து கலைபயின்றோ நின்றமிழினிய நூல்
எத்தனையோ வந்தனையு மெண்ணியாழங் கண்டோன்
பழுத்த தமிழ்ப் புலமையினோர் பேரவையில் முந்தும்
பணிந்தமொழிப் பெரும் புலவன் கனிந்த குணநலத்தான்””சொல்வகையும் சொற்றொகையுஞ் சொல்னடையுமுணர்ந்தோன்
சொல்லவல்லான் சொற்சோராத் தூய நெறியாளன்
பல்வகைய நூற்கடலுட் படிந்துண்மை மணிகள்
பலவெடுத்துத் திரட்டிவைத்த பண்டாரம் போல்வான்”
அன்பினால் பிணைக்கப்பட்ட அவரது உள்ளம் நண்பனை நினைந்து நினைந்து உருகுகின்றது. இத்துயரினை ஆற்ற வழியின்றித் தவிக்கின்றார். இமய மலையிலிருந்து வங்கக் கடலை நோக்கிச் செல்லும் புனிதமான கங்கை நதியின் சாரலையடைந்து அதன் அரவணைப்பில் சோகத்தாற் கொதிக்கும் தம்முளத்தை ஆற்றிக்கொள்ள முற்படுகின்றார்.
“பொங்கியெழுந் துயர்க்கனலைப் போக்குதற்கும் மாயப்
பொய்யுலகி னுண்மையினைப் புலங்கொளற்குங் கருதிக்
கங்கையெனுந் தெய்வநதிக் கரைப்புறத்தை யடைந்து
கல்லென்று சொல்லிவிழும் நீர்த்தரங்கங் கண்டேன்”
பொங்கிவரும் கங்கை நதியின் நீரலைகள் போன்று அடிகளாரின் உள்ளத்திலிருந்து துயர அலைகள் பொங்கியெழுகின்றன. அவை கட்டுமீறிப் பாய்கின்றன. “உள்ளத்திருந்தெழும் உணர்ச்சிப் பெருக்கே பாட்டுக்கு நிலைக்களன்” என்னும் ஆங்கிலப் புலவர் வோட்ஸ்வோத்தின் கூற்றுக்கமைய அடிகளாரின் உள்ளத்துணர்வினைப் பாடல்கள் நன்கு படம்பிடித்துக் காட்டுகின்றன.
வாழ்வில் இன்பமும் துன்பமும் வருவது சகசம். இந்த உண்மையை நங்கு அறியாதோரே இன்பம் வந்தபோது துள்ளிக் குதிப்பர். துன்பம் நேர்ந்தபோது சோர்ந்து அழுவர். இன்ப துன்பங்களாகிய சுழல் காற்றில் மானிடர் அலைகின்றனர். இந்த உண்மையை உணராதோர்க்கு இன்பமும் துன்பமும் மயக்கத்தையே செய்யும். இதனை அடிகளார் பின்வரும் பாடலில் அழகுற விளக்கியுள்ளார்.
“இன்பவிளை யாட்டினிடை மேலெழுந்து குதிப்பார்
எமக்கு நிக ராரென்பர் இருகணத்தி னுளத்தில்
துன்பமுற மண்ணில்விழுந் திருகண்ணீர் சொரியச்
சோர்ந்தழுவார் மயக்கமெனுஞ் சுழல்காற்றி லலைவார்”
நீர்த்திரையால் இழுப்புண்ட குச்சியுடன் மனித வாழ்க்கையைப் பொருத்திப் பார்க்கின்ற அடிகளார் இன்ப துன்பச் சூழலில் அகப்பட்டுத் தவிக்கும் மனிதன் மரணமெனும் கரையில் ஏற்றுண்டு கிடப்பதையும், பின்னர் மறுபிறவியாகிய திரை கவர மீண்டும் பிறந்து
இன்பதுன்பங்களில் மூழ்கித் தவிப்பதையும் நினைவூட்டுகின்றார் இப்படி:
“மரணமெனுந் தடங்கரையி லெற்றுண்டு கிடப்பார்
மறுபிறவித் திரைகவர வந்தியையுங் கருவி
கரணமுறு முடலெடுத்து மண்ணுலகி னுழல்வார்
காதலிப்பா ரெண்ணிறைந்த வேதனையுட் புகுவார்”
ஆசையே துன்பத்திற்குக் காரணமாகும். இந்த உண்மையை “காதலிப்பார் எண்ணிறைந்த வேதனையுட் புகுவார்” என்னும் அடியில் அடிகளார் அழகாகப் புலப்படுத்தியுள்ளார்.
இவ்வாறெல்லாம் வாழ்க்கை நிலையாமையினையும், கல்விச் சிறப்பினையும் தந்து எடுத்துக்கூறியிருக்கின்றார் அடிகளார். இவ்வுலகில் உள்ளார் அன்னத்தை, கிளியை, முகிலைத் தூதாக அனுப்புவது மரபு. இம்மரபுக்கமையவே அடிகளார் தாம் வரைந்த ஓலையைச் சிவபெருமானின் செஞ்சடையில் வீற்றிருக்கும் கங்கையெனும் தெய்வ நதிமூலம் அனுப்பத் துணிகின்றார்.
உள்ளத்திலே உண்மை ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்” என்னும் பாரதியின் வாக்குக்கிணங்க அடிகளாரின் உள்ளத்தெழுந்த உண்மை ஒளி கங்கையில் விடுத்த ஓலையில் நன்கு பிரகாசிக்கின்றது. அடிகளாரின் கவித்திறனை, கற்பனையாற்றலை, தமிழ்ப்பற்றைப் பறைசாற்றும் கங்கயில் விடுத்த ஒலை, தமிழ் உள்ளவரை அடிகளாரை நினைவூட்டும் என்பது திண்ணம்.
பஞ்ச கிருத்திய நுட்பத்தைக் கூறும் நடராஜ வடிவத்தைப் பற்றியும் ஒரு நூலை ஆக்கித்தந்துள்ளார். கர்மயோகம், ஞான யோகம், விவேகானந்த ஞானதீபம் முதலியன அவரது மொழிபெயர்ப்பு நூல்களாகும்.
தமிழறிஞர் விபுலானந்தர்அடிகளார் விபுலானந்தரின் இலக்கியப் பணி குறித்துப் பேசும் போது அன்னார் ஆக்கிய இலக்கிய ஆக்கங்களில் தமிழுக்குப் புதிதாகவும் மகுடமாகவும் அமைவது யாழ் நூலாகும். பழந்தமிழரின் இசை நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ் செங்கோட்டி யாழ் சகோட யாழ், என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது. அடிகளாரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாக யாழ் நூல் தமிழுக்குக் கிடைத்தது. யாழ் நூல் ஆராய்ச்சிக்காக தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று 15 ஆண்டுகள் ஆராய்ந்து கரந்தை தமிழ்ச்சங்க ஆதரவில் திருக்கொள்ளம்புதூர்த் திருக்கோயிலில் 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்கள் “யாழ் நூல் அரங்கேற்றம் வெகு விமரிசையாக நடந்தேறியது.
பாரிசவாத்தினால் தாம் பீடிக்கப்பட்டிருந்தும் தமது 45 வருடக்குறிக்கோள் நிறைவேறிய திருப்தியில் இருந்த சுவாமி விபுலானந்தர் “யாழ் நூல்” அரங்கேறிய அடுத்தமாதமே முடிவுற்றது. 1947 ஆம் ஆண்டு ஆடி மாதம் 19 ஆம் திகதி அவர் விண்ணுலகம் அடைந்தார்.
சிவானந்த வித்தியாலய முன்றலிலுள்ள மரத்தின் கீழ் சுவாமிகளின் பூத உடல் அடக்கம் செய்யப்பட்டு அவரின் கல்லறை மேல் அவரால் பாடப்பட்ட
“வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது”
என்ற கவிதா வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
“மஹாகவி” உருத்திரமூர்த்தி அவர்கள் தந்த மெய்யான கவிவரிகளை மீள ஒப்பித்து
யூலை 19 அருட்டிரு விபுலானந்த அடிகளாரின் நினைவு நாளில் அவர் தம் சிறப்பைப் போற்றுவோம்.
“ஆங்கி லத்துக் கவிதை பலப்பல
அருமை யாகத் தமிழ்செய்து தந்தனன்;
நாங்கள் மொண்டு பருகி மகிழவும்
நன்று நன்றென உண்டு புகழவும்,
தீங்க னிச்சுவை கொண்டவை தானுமே
தீட்டினான்: தெய்வ யாழினை ஆய்ந்ததால்
ஓங்கி னானின் உயர்வைப் பருகுவோம்!
உண்மை யோடவன் நூலும் பயிலுவோம்”
By – Shutharsan.S
நன்றி – தகவல் மூலம் – http://kizkkuman.blogspot.com இணையம்.

No comments

Lanka Education. Powered by Blogger.