News

இலங்கையில் பாடசாலை செல்லும் மாணவர்களை பாதுகாக்க வேண்டியது யார்?


கொரோனா தொற்றுநோய் பரவலை தடுக்கும் வகையில் சமூக இயல்பு நிலை முடக்கப்பட்ட போதிலும் மீண்டும் சமூகத்தினை இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளின் இறுதி அங்கமாகவே மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு அழைக்கப்படுவர் என கல்வி அமைச்சர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றார். அந்தவகையில் இலங்கை சமூகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கும் பின்னணியிலேயே தற்போது பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அக்கல்வி செயற்பாடுகள் மீண்டும் கொரோனா தொற்றுநோயினால் பாதிக்கப்படாதிருப்பதற்கான நடவடிக்கைகளை சமூகத்தில் ஒவ்வொரு தனிநபரும் எந்தளவிற்கு நிறைவேற்றுகிறான் என்பதிலேயே
இந்நாட்டின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதன் சாத்தியப்பாடு தங்கியிருக்கின்றது.
சமூக அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் பாடசாலை மாணவர் சமூகம் மீது முதன்மைக் கவனம் செலுத்துவதே வழக்கமாக இருந்து வருகின்றது. அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் நம் நாட்டில் பரவும் அறிகுறிகள் தென்பட ஆரம்ப நாட்களில் பாடசாலை வட்டாரத்திலேயே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளின் வழிகாட்டி இந்த நாட்டின் முதல் கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்டமை மற்றும் சீனாவின் வூஹான் மாநிலத்தில் சிக்குண்டிருந்தவர்களை மீட்பதற்காக சென்று வந்த விமானி ஆகியோர் மூலம் கொரோனா தொற்றுநோய் அவர்களின் பிள்ளைகளுக்கும் தொற்றியிருக்கக்கூடும் என்ற பீதியே நம் நாட்டில் அத்தொற்றுநோய் பற்றிய முதல்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.
குறிப்பிட்ட இந்நபர்கள் மூலம் அவர்களது பிள்ளைகளுக்கும் தொற்றுநோய் தொற்றுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்ற ஊகிப்பின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட நபர்களின் பிள்ளைகள் கல்விகற்று வந்த பாடசாலைகளிலேயே கொரோனா தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியப்பாடு இருக்கின்றது என்ற பதற்றநிலை ஏற்பட்டது.
இதனைக் கவனத்தில் கொண்டு குறிப்பாக பாடசாலை மாணவர்கள் எளிதில் தொற்றுநோய்க்கு ஆளாகக்கூடும் என்பதனாலேயே கல்வி அமைச்சினால் ஆரம்பக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக உடன் அமுலுக்குவரும் வகையில் சகல அரச பாடசாலைகளையும் உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்தோடு அந்நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தனியார் பாடசாலைகளுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டது. சுமார் மூன்று மாதகாலங்களாக அவ்வாறு இந்நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்த பின்னணியில் பாடசாலை மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களுக்கான கற்பித்தலை இணைய வழி மூலமாக பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளும் பெருமளவில் பாடசாலை நிர்வாக சமூகத்தினால் செயற்படுத்த நடவடிக்கை எடுத்து வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் தொடர்ச்சியாக பாடசாலைகளை செயலிழக்க வைப்பதென்பது பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டாம் கட்ட கொரோனா தொற்றுநோய் மீண்டும் பரவுவதற்கான சாத்தியப்பாடு பல்வேறு உலக நாடுகளில் கண்டறியப்பட்டுவரும் பின்னணியிலேயே இவ்வாறு பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. ஆகையால் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரின் பாதுகாப்பு மீது இந்த நாட்டில் கொரோனா பற்றிய பதற்றம் ஏற்பட்ட ஆரம்ப காலத்தை விட மிக கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டிய தேவை இன்று ஏற்பட்டிருக்கின்றது.
மறுபுறத்தில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றுத்தருமாறு அத்துறயைச் சார்ந்தவர்கள் ஜனாதிபதியை சந்தித்து விடுத்த வேண்டுகோளின் விளைவாக மீண்டும் தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான அனுமதியும் தற்போது வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் இதன்போது பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பாடசாலை நிர்வாகம், பொதுப் போக்குவரத்து துறையினர், பாடசாலை போக்குவரத்து துறை சார்ந்தோர் தத்தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் மிகச் சிறந்த வகையில் நிறைவேற்ற வேண்டிய சமூகக் கடப்பாடு இருக்கின்றது என்பதை உணர்ந்து செயற்படுதல் அவசியமாகும்.
குறிப்பாக பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவைக்கின்ற பெற்றோர் தமது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதற்கான தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றார்களா என்பதைப் பற்றி முழுமையான கவனத்தை செலுத்துதல் அவசியமாகின்றது. ஏனெனில் நோய் தொற்றுவதற்கான அறிகுறிகள் காணப்படும் பின்னணியிலும் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தமது பிள்ளைகளை மாத்திரமன்றி இன்னும் பெருமளவு பிள்ளைகளை நோயாளர்களாக்குவதற்கு பெற்றோர்களின் கவனயீனம் என்பது காரணமாக அமைந்து விடக்கூடும் என்பதால் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு முன் சுகாதாரத்துறையினரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் சகல சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தத்தமது பிள்ளைகள் பின்பற்றுகின்றார்களா என்பதில் பெற்றோரைப் போன்றே மாணவ சமுதாயமும் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயத் தேவையாக அமைகின்றது.
கொரோனாவின் பின்னரான பாடசாலை வாழ்க்கை என்பது புதிய இயல்பு நிலைக்கு தம்மை தயார்படுத்திக் கொள்வதாகும் என்பதை சகல மாணவர்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தேவையான அறிவுரைகளை வழங்குவதுடன் மாணவர்களுக்கு தேவையான சுகாதாரப் பாதுகாப்பிற்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். குறிப்பாக சவர்க்காரம் கொண்டு கைகளை கழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றுவதுடன் கொரோனா தாக்கத்தின் முன்னரான காலத்தைப் போன்று உணவு வகைகளை பகிர்ந்து உண்ணுதல் போன்ற பழக்கவழக்கங்களை இயன்றளவு தவிர்த்துக் கொள்ளுதல் நல்லதாகும்.
பாடசாலை வளாகத்திற்குள் பிரவேசிக்கின்ற மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கல்வி அமைச்சு, பாடசாலை அபிவிருத்தி சங்கம், பெற்றோர் ஆகியோரின் உதவி மற்றும் ஒத்துழைப்பை பெற்று பாடசாலை சமூகத்தினரின் நோய்த்தடுப்பு, சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் பாடசாலை அதிபர் உள்ளிட்ட நிர்வாகத்திற்கே இருக்கின்றது. எனினும் இவ்விடயத்தில் தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கும் பங்களிப்பினை பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. அதனை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் தனியார் வர்த்தக நிறுவனங்களும் தமது சமூக பொறுப்புணர்வினை வெளிப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
மாணவர்கள் பாடசாலை சென்று வருவதற்காக பெரும்பாலும் பொதுப் போக்குவரத்து மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைகள் ஆகியவற்றை உபயோகப்படுத்துவதால் பாடசாலை மாணவர்களைக் கொண்டு செல்லும் வாகன ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு மீதான கவனத்தை செலுத்துவதுடன் சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்டிருக்கும் பிரத்தியேக அறிவுறுத்தல்களை பின்பற்றுதலில் கண்டிப்பாக நடந்து கொள்வது அவசியமாகின்றது. சமூக இடைவெளி என்பதை பாடசாலை போக்குவரத்து துறையில் கடைப்பிடிப்பது மிகக் கடினமாகும் என்பதை கடந்த சில நாட்களாக பாடசாலை போக்குவரத்தின்போது அத்துறை சார்ந்தோர் பின்பற்றும் செயற்பாடுகள் வெளிப்படுத்துவதால் ஆகக் குறைந்தபட்சம் முகக் கவசம் மற்றும் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வதற்கான கிருமிநீக்கிகளை பயன்படுத்தல் ஆகியவற்றை தீவிரமாக கடைப்பிடித்தல் அவசியமாகும்.
அரச பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பின்னணியில் தனியார் கற்பித்தல் வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கத்தினால் வலியுறுத்தப்பட்டிருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைப்பிடிக்கும் கடப்பாட்டை தனியார் வகுப்பு நடத்துவோர் கொண்டிருத்தல் வேண்டும். அத்தோடு தனியார் வகுப்புக்களில் ஒரே நேரத்தில் பெருமளவு மாணவர்களைக் குவிப்பதற்குப் பதிலாக பல குழுக்களாக பிரித்து அவர்களுக்கு வேறுபட்ட நேரங்களில் பாடங்களைக் கற்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வழங்கப்பட்டிருக்கும் அறிவுரைகளை அவர்கள் தவறாது பின்பற்றுதல் அவசியமாகும்.
தொற்றுநோயிலிருந்து மாணவ சமுதாயத்தினை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பாடசாலைகளை தொடர்ச்சியாக மூடிவைப்பதென்பது ஒரு சாதகமான தீர்வாக அமையாது. அத்துடன் மாணவர்களுக்கு தொடர்ச்சியான கல்வியினை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை. இருப்பினும் அக்கல்வியினை மாணவ சமுதாயத்தின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையிலேயே பெற்றுக்கொடுக்க வேண்டியது கல்வி துறைசார்ந்த சகலரதும் சமூகப் பொறுப்பாகும். இதனை நன்கு உணர்ந்து ஒவ்வொரு கட்டத்திலும் தம்மால் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் கடைப்பிடிப்பதன் மூலமே ஒருபுறத்தில் கொரோனா தொற்றுநோய் பரவுதலை கட்டுப்படுத்தும் அதேவேளை மறுபுறத்தில் மாணவ சமூதாயத்தின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில் அதனை முன்னெடுக்க முடியும்.

Tags:- Srilanka, News, Schools, Students, Corona, Protect, Prevent, Social, Education, Institutes, Advice, Diseases, COVID 19, Private Classes, Lanka Educations, Learn Easy, lkedu

No comments

Lanka Education. Powered by Blogger.