News

உயர் தர பரீட்சை ஒக்டோபரில் ??

க.பொ.த/உயர் தர பரீட்சை
ஒக்டோபரில் நடத்துமாறு ஜனாதிபதியிடம்
கோரிக்கை - மாணவர்களுக்கு ஜனாதிபதி சாதகமான பதில்.


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மாதம் நடத்துமாறு சில மாணவிகள் முன்வைத்த கோரிக்கையை கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நாவலப்பிட்டியில் தெரிவித்தார்.
பொதுஜன முன்னணியில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக நேற்று கண்டி மாவட்டத்தில் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாவலப்பிட்டி மக்கள் பெரும் வரவேற்பளித்தனர்.
இதன்போதே மாணவர்கள் சிலர் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதே வேளை பொதுஜன முன்னணியுடன் அண்மையில் கைகோர்த்த நாவலப்பிட்டி கங்க இகல கோரலே பிரதேச சபையின் 08 ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் பஸ்பாகே கோரலை பிரதேச சபையின் 02 உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்தித்தனர்.
ஜனாதிபதி முன்னெடுத்திருக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர்கள் உறுதியளித்தனர்.
தேயிலை கொழுந்துக்கு நியாயமான விலையை பெற்றுத்தர உதவுமாறு நாவலப்பிட்டி பஸ் நிலையத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி யிடம் அத்தொழிலில் ஈடுபடுவோர் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.
சுதேச விவசாயிகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் தேயிலைக் கைத்தொழிலை பாதுகாப்பதற்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாவலப்பிட்டி பிரதேச மக்கள் முகங்கொடுத்துள்ள காணி பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவருடன் கலந்துரையாடி அதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்தானந்த அழுத்கமகேயிடம் தெரிவித்தார்.
தோட்டப்பகுதி பிள்ளைகளுக்கு நாவலப்பிட்டியில் உயர் கல்வி நிறுவனமொன்றையும் தொழிநுட்ப கல்லூரி ஒன்றையும் பெற்றுத் தருமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

Tags:- A/L, Exam, October, Students, Requested, President, People, Farmers, Discussion, Minister, Education, Lanka Educations, Learn Easy, lkedu

No comments

Lanka Education. Powered by Blogger.