மகாவம்சம் இலங்கையின் சிறந்த வரலாற்று மூலாதாரமா? இல்லையா?
இலங்கையின் மிகப்பழைய இலக்கிய வரலாற்று மூலாதாரமான மகாவம்சம் ஓர் சிறந்த வரலாற்று மூலாதாரமாக கொள்ள முடியுமா? இல்லையா? என்பதே இப்பதிவின் உள்ளடக்கம்.
குறிப்பு: இது தரம் 6 தொடக்கம் உயர் தரம் வரை இலங்கையில் கல்வி கற்கும் மாணவர்கள் கற்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை ஆகும்.
இலங்கை வரலாற்றை கட்டியெழுப்புவதில் இலக்கிய வரலாற்று மூலாதாரமான மகாவம்சம் அளப் பரிய பங்கு வ்கிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் மகாவம்சத்தில் காணப்படும் அனைத்து வரலாற்று சம்பவங்களும் உண்மையானவையல்ல என்பது தெளிவு.

மகாவம்ச நூலின் அமைப்பினை அறிவது அவசியம்.
மகாவம்சத்தினை எழுதியவர் மகாவிகாரையினை சேர்ந்த திக்செந்தா பிரிவெனாவை சேர்ந்த “மகாநாம தேரர்” எனும் பெளத்த துறவி ஆவார்.
மகாவம்சம் எழுதப்பட்ட காலம் கி. பி 6ம் நூற்றாண்டில் ஆகும் அதாவது மன்னன் தாதுசேனன் அல்லது அவனுடைய மகன் காலத்தில் ஆகும்.
இந் நூல் 37 அத்தியாங்களினை கொண்டது.
இலங்கையின் ஆரம்ப வரலாறு முதல் மன்னன் மகாசேனன் வரையான வரலாற்றினை எடுத்துரைக்கின்றது மகாவம்சம்.
முதல் அத்தியாயம் புத்தர் இலங்கை விஜயம் எனும் தலைப்பில்,கெளதம புத்தர் இலங்கைக்கு மூன்று முறை விஜயம் செய்தார் என கூறுகின்றது.
தொடர்ந்து விஜயன் வருகை, பண்டுகாபயன், தேவநம்பிய தீஸன், துட்டகாமினி, வட்டகாமினி, மகாசேனன் போன்ற இலங்கையின் மிகச் சிறந்த மன்னர்கள் பற்றி எடுத்துரைக்கின்றது.
மேலும் மகாவம்ச நூலினை எழுதுவதற்கு ஆசிரியர் பயன்படுத்திய மூலாதாரம் “செவி வழிக் கதைகள்/ மரபு வழிக் கதைகள்” ஆகும். எனவே இதன் உண்மைத் தன்மையினை நாம் உற்றுநோக்குவோம்.
மகாவம்சம் எனும் நூலினை ஆசிரியர் தாம் வாழ்ந்த காலத்திலிருந்து சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களினை தகுந்த ஆதாரங்கள் இன்றி முன்வைத்திருப்பது மகாவம்சத்தின் ஓர் குறைபாடாகும்.
இதில் பல விடயங்களினை ஆசிரியர் தமது விருப்பப்படி சேர்த்துக் கொண்டார் என்பது தெளிவு என்பதால் இந்த இலக்கிய மூலாதாரத்தினை பிற வரலாற்று மூலாதாரங்களின் (கல்வெட்டுக்கள், தொல்பொருட்கள்) உதவியுடன் உறுதி செய்வதன் மூலம் நாம் மகாவம்சம் எனும் நூலின் உண்மைத்தன்மையினை மதிப்பிட முடியும்.
மகாவம்சத்தின் முதல் அத்தியாயமான புத்தரின் இலங்கை வியஜம் பற்றி மகாவம்சம் தவிர வேறு எந்த மூலாதாரத்திலும் அறிய முடியவில்லை என்பதால் அது இலங்கையினை ஓர் பெளத்த நாடாக காட்ட விரும்பிய காரணத்தினால் இப் பகுதியினை உள்ளடக்கியுள்ளார்.
விஜயன் வருகையினை நாம் சில இந்திய வரலற்று மூலாதாரங்களுடன் ஒப்பிட்ட கூடியவாறு காணப்படுகின்றது எனவே இது போன்ற ஓர் வரலாற்று நிகழ்வு நடந்திருக்கும் என எம்மால் உறுதி செய்ய முடிகின்றது.
இதில் துட்டகாமினி மன்னன் வரலாற்றினை 14 அத்தியாயங்களில் பாடியிருக்கிறார் மகாவம்ச ஆசிரியர். இதனால் மகாவம்சத்தின் காவிய நாயகன் துட்டகாமினி என்பர் வரலாற்றுப் பேராசிரியர்கள்.
மேலும் துட்டகாமினி மன்னன் தேரவாத பெளத்த சமயத்திற்கு அளப்பரிய பணியாற்றினான் என்பதாலும் அவனை ஆசிரியர் நூலில் முக்கியத்துவப்படுத்தியுள்ளார்.
இலங்கை வரலாற்றில் பொருளியல் துறையில் மிக முக்கியத்துவம் பெறும் மன்னனான மகாசேன மன்னனின் வரலாற்றினை ஒரு சில பாடல்களில் மட்டுமே கூறியிருக்கிறார் மகாவம்ச ஆசிரியர். காரணம் மகாசேன மன்னன் மகாயான பெளத்த சமயத்தினை ஆதரித்தான் என்பதால். எனவே மகாவம்சம் ஓர் சமயம் சார்ந்த நூல் எனவும் கூற முடியும்.
எனவே மகாவம்சத்தின் உண்மைத்தன்மையினை நாம் பிற மூலாதாரங்களின் உதவியுடன் ஆராய்ந்து அதன் முடிவுகளை கொண்டு வரலாற்றினை கட்டியெழுப்ப வேண்டும். எவ்வாறாயினும் எமது நாட்டின் தொடர்ச்சியான வரலாற்றினை கட்டியெழுப்ப மகாவம்சம் முக முக்கிய பணியாற்றுகின்றது என்பதால் மகாவம்சம் ஓர் மிக முக்கியமான நூலாகும்.
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
No comments