கற்றலும் ஞாபகமும் : அறிவுசார் செயன்முறைகள்
அறிமுகம்
கற்றலும் ஞாபகமும் ஒன்றோடு ஒன்று நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ள அறிவுசார் செயன்முறைகளாகும். இதனால் தற்கால கல்வி-உளவியலில் இவ்விரு எண்ணக்கருக்களும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஞாபகம் கற்றலுக்கான அடிப்படை உளவியல் செயற்பாடாகக் கருதப்படுவதால் “ஞாபகம் இன்றி கற்றல் இல்லை” என்கிறார் உளவியல் ஆய்வாளரான விக்கென்ஸ் (Wickens, 2005) என்பவர். இதனால் கற்றலில் செல்வாக்குச் செலுத்தும் மிகப் பிரதான அறிவுசார் செயன்முறைகளில் ஒன்றாக ஞாபகம் கருதப்படுகிறது. பிள்ளைகளின் மனவெழுச்சி, அறிவுசார் விருத்தி மற்றும் சமூக விருத்திக்கான அடிப்படை உளவியல் காரணியாகவும் ஞாபகம் விளங்குகின்றது. இக்கட்டுரையானது ஞாபகம் என்றால் என்ன? ஞாபகத்திற்கும் கற்றலிற்கும் இடையிலான தொடர்பு என்ன? கற்றலின் போது ஞாபகம் எவ்வாறு தொழிற்படுகிறது? கற்றலை மேம்படுத்த ஞாபகத்தை அதிகரிக்கும் நுட்பங்கள் என்ன? என்பது பற்றி சுருக்கமாக ஆராய்கின்றது.
கற்றல் - ஞாபகம் இரண்டுக்கும் இடையிலான தொடர்பு
கற்றல் என்பது சூழலில் இருந்து அனுபவத்தை அல்லது திறனைப் பெற்றுக்கொள்ளும் ஒரு செயற்பாடு எனவும் ஞாபகம் என்பது கற்றவற்றை மூளையில் இருத்திக்கொள்ளும் ஒரு செயற்பாடு எனவும் அமெரிக்க உளவியல் சங்கம் (American Psychological Association, 2020) வரைவிலக்கணப் படுத்துகிறது.
இவ்வரைவிலக்கணத்தில் இருந்து கற்றல் மற்றும் ஞாபகம் இவ்விரண்டிற்கும் இடையிலான தொடர்பை பின்வருமாறு புரிந்துகொள்ளலாம். அதாவது மாணவன் ஒருவன் வீடு, பாடசாலை, வணக்கஸ்தளம், வாசிகசாலை, மைதானம், பயிற்சி நிலையம் போன்ற சூழலில் இருந்து பெற்றுக்கொண்ட அறிவு, அனுபவம், திறன், பயிற்சி போன்றவற்றை மூளையில் சேமித்து வைப்பதற்கும் தேவையான போது அவற்றை நினைவில் கொண்டுவருவதற்கும் ஞாபகமே அடிப்படை அறிவுசார் செயற்பாடாகத் தொழிற்படுகிறது. மேலும் கற்றலுக்கான முதலும் முக்கியமுமான உளவியல் காரணியாக ஞாபகம் விளங்குகின்றது. இதனால் ஞாபகம் இல்லாமல் கற்றல் சாத்தியம் இல்லை என உளவியலாளர்கள் வாதிடுகின்றனர்.
கற்றல் - ஞாபகம் ஆகியவற்றுக்கான மூளையின் தொழிற்பாடு
கற்றல், ஞாபகம் ஆகிய இரண்டு தொழிற்பாடுகளும் மனித மூளையின் மீதே கட்டமைக்கப்படுகிறன. மனித மூளையானது அவதானம், புலக்காட்சி, கிரகித்தல், போன்ற மேலும் சில அறிவுசார் செயன்முறைகளுடன் தொடர்புபடுகின்றது. ஆயினும், இவ்வறிகைசார் செயன்முறைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளன. உதாரணமாக, மாணவன் ஒருவன் சூழலில் ஏற்படும் ஒரு தூண்டலினால் (அவதானம்) பெற்றுக்கொள்ளும் அறிவை அல்லது அனுபவத்தை முதலில் புலக்காட்சி பெறுகிறான். பின்பு, அதனை விளங்கிக் கொண்டு ஞாபகத்தில் இருத்திக் கொள்வதுடன் தேவையான போது அதனை மீண்டும் நினைவில் கொண்டு வருகிறான். இச்செயற்பாடுகள் அனைத்தும் மனித மூளையிலேயே இடம்பெறுகின்றன.
மூளையானது கற்றுக்கொள்கின்ற விடயங்களை ஞாபகத்தில் இருத்திக்கொள்ள பின்வரும் மூன்று செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.
1. குறியாக்கம் (Encoding)
குறியாக்கம் என்பது சூழலில் இருந்து பெற்றுக்கொள்ளும் அறிவு அல்லது அனுபவம் குறியாக்கம் செய்யப்படுவதைக் குறிக்கும்.
2. சேமித்தல் (Storing)
இது குறியாக்கம் செய்யப்பட்ட தகவல்கள் ஞாபகத்தில் சேமிக்கப்பட்டு பராமரிக்கப்படுவதைக் குறிக்கும்.
3. மீளப்பெறல்/நினைவு படுத்தல் (Retrieving)
சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் தேவையான போது மீளப்பெறுவதை அல்லது நினைவு படுத்தப்படுவதை இது குறிக்கும்.
மேற்படி செயற்பாடுகளை அவதானிக்கும்போது மாணவர்கள் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விடயமும் முதலில் மூளையில் குறியாக்கம் செய்யப்படுகிறது. பின்பு சேமிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு தேவையானபோது நினைவுக்குக் கொண்டுவரப்படுகிறது. ஞாபகத்துடன் தொடர்புடைய இச்செயற்பாடுகளில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டாலும் மாணவர்களது கற்றல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே கற்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் மாணவர்கள் ஞாபகத்தில் இருத்திக் கொள்வதனால் வகுப்பறையில் நல்ல கற்றல் அடைவுகளையும் பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேறுகளையும் காணமுடியும்.
ஞாபகமும் குறியாக்கமும்
ஞாபகம் தொடர்பான அறிகைசார் செயற்பாட்டின் முதன்மைச் செயற்பாடாக குறியாக்கம் விளங்குகின்றது. மூளையின் மீது மேற்கொள்ளப்படும் இச்செயற்பாடானது புலன் உருப்புக்களின் தூண்டலினால் இடம்பெறும் ஓர் உளவியல் செயன்முறை என உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சூழலில் இருந்து கற்றுக்கொள்ளும் புதிய விடயங்களை மூளையானது முன்னைய அனுபவங்கள் மற்றும் எண்ணக்கருக்கள் என்பவற்றுடன் தொடர்புபடுத்தி ஒரு குறியீடாக (Code)
அல்லது அடையாளமாக (Label) மாற்றுகின்றது. கற்றலை ஞாபகத்திற்குக் கொண்டு செல்லும் இச்செயற்பாட்டை ஓர் உள்ளீடு (Input) செயன்முறை எனவும் கூறப்படுகின்றது. குறியாக்கச் செயறன்முறையானது மூளையில் நான்கு வழிகளில் இடம்பெறுகின்றன. அவையாவன;
1. காட்சி சார் குறியாக்கம் (Visual )
காட்சி சார் குறியாக்கம் என்பது சூழலில் கண்களால் காணும் காட்கிகள் (இயற்கைக் காட்சி, படம், வரைபடம், அட்டவணை, கோளம்) குறியீடாக அல்லது அடையாளமாக மாற்றப்படுவதைக் குறிக்கும்.
2. ஒலி சார் குறியாக்கம் (Acoustic)
ஒலி சார் குறியாக்கம் என்பது சூழலில் காதுகளால் கேட்கும் ஓசைகள் (பாடல், இசை, கதை, உரையாடல், நகைச்சுவை, கவிதை) குறியீடாக அல்லது அடையாளமாக மாற்றப்படுவதைக் குறிக்கும்.
3. கருத்து சார் குறியாக்கம் (Semantic)
கருத்து சார் குறியாக்கம் என்பது சூழலில் பெறப்படும் தகவல்கள் (சொல், சொற்றொடர், வசனம், நிகழ்வு) குறியீடாக அல்லது அடையாளமாக மாற்றப்படுவதைக் குறிக்கும்.
4. தொடுகை சார் குறியாக்கம் (Tactile)
தொடுகை சார் குறியாக்கம் என்பது சூழலில் ஏதேனும் ஒன்றை கைகளினால் தொடுவதினால் அல்லது அசைப்பதினால் ஏற்படும் அனுபவங்கள், உணர்வுகள் குறியீடாக அல்லது அடையாளமாக மாற்றப்படுவதைக் குறிக்கும்.
கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விடயமும் மேற்படி நான்கு வழிகளில் மூளையினால் குறியாக்கம் செய்யப்பட்டு ஞாபகத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றது.
குறியாக்கத்திற்கும் கற்றல் முறைகளுக்கும் இடையிலான தொடர்பு
அறிகை சார் செயன்முறையில் ஒவ்வொரு கற்றல் முறையும் ஒவ்வொரு குறியாக்கச் செயன்முறையுடன் தொரட்புபடுவதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பொதுவாக கற்றல் முறைகள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.
A. பார்த்தல் மூலம் கற்றல் (Visual Learning)
பார்த்தல் மூலம் கற்றல் முறையானது சூழலில் ஏதேனும் ஒரு பொருளை அல்லது விடயத்தை கண்கலளால் பார்த்துக் கற்றுக்கொள்வதைக் குறிக்கும். அதாவது சில மாணவர்கள் எதையும் தம் கண்களால் பார்ப்பதன் மூலம் இலகுவில் கற்றுக்கொள்ளும் இயல்பைக் கொண்டுள்ளார்கள். பெரும்பாலும் இவ்வகை மாணவர்கள் வகுப்பறைகளில் வரைபு, அட்டவணை, படம், காட்சி, வரைபடம், கையேடு, குறிப்பு போன்ற கற்றல் சாதனங்களைப் பயன்படுத்திக் கற்பதையே விரும்புகிறார்கள். இக்கற்றல் முறையானது காட்சி சார் குறியாக்கத்துடன் தொடர்புபடுகிறது.
B. கேட்டல் மூலம் கற்றல் (Auditory Learning)
கேட்டல் மூலம் கற்றல் முறையானது சூழலில் ஏதேனும் ஒரு விடயத்தை காதுகளால் கேட்டுக் கற்றுக்கொள்வதைக் குறிக்கும். மாணவர்களில் சிலர் எதையும் தம் காதுகளால் செவியேற்பதன் மூலம் இலகுவில் கற்றுக்கொள்ளும் இயல்பைக் கொண்டுள்ளார்கள். அநேகமான சந்தர்ப்பங்களில் இவர்கள் கற்பித்தல், விரிவுரை, விவாதம், கலந்துரையாடல், வினாக் கேட்டல், போதனை, ஒலி நாடா போன்ற கற்றல் நுட்பங்களைப் பயன்படுத்திக் கற்பதையே விரும்புகிறார்கள். இக்கற்றல் முறையானது ஒலி சார் குறியாக்கத்துடன் தொடர்புபடுகிறது.
C. தொடுகை மூலம் கற்றல் (Tactile Learning)
தொடுகை மூலம் கற்றல் முறையானது சூழலில் ஏதேனும் ஒரு பொருளை தொட்டுணர்ந்து கற்றுக்கொள்வதைக் குறிக்கும். மற்றொரு வகையான மாணவர்கள் எதையும் தொட்டுணர்வதன் மூலம் இலகுவில் கற்றுக்கொள்ளும் இயல்பைக் கொண்டுள்ளார்கள். இவ்வகை மாணவர்கள் பார்த்தல், கேட்டல் என்பவற்றின் மூலம் கற்பதை விடவும் தொடுதல், அசைத்தல், இயக்குதல் போன்ற செயற்பாடுகள் மூலம் சுலபமாகக் கற்றுக்கொள்கிறார்கள். அதிகமான சந்தர்ப்பங்களில் இம்மாணவர்கள் இசைக் கருவிகளை இசைத்தல், பொருட்களைச் சோதித்தல், கருவிகளை இயக்குதல் போன்ற செயற்பாடுகள் மூலம் கற்பதையே விரும்புகிறார்கள். இக்கற்றல் முறையானது தொடுகை சார்; குறியாக்கத்துடன் தொடர்புபடுகிறது.
மாணவர்களது கற்றல் இயல்புக்கு ஏற்றவாறு கற்றல் முறைகளையும் நுட்பங்களையும துணைச் சாதனங்களையும் பயன்படுத்துவதன் மூலம் கற்றலை இலகு படுத்தவும் கற்றவற்றை மாணவர்கள் சுலபமாக ஞாபகத்தில் இருத்திக் கொள்ளவும் செய்ய முடியும். கற்றல்-கற்பித்தல் செயன்முறையின் போது வகுப்பறையில் பல்வேறு படங்கள், வரைபுகள், அட்டவணைகள், காட்சிகள், வரைபடங்கள் போன்றவற்றைக் காட்சிப்படுத்துவதன் மூலமும் விரிவுரை, விவாதம், கலந்துரையாடல், வினாக் கேட்டல், போதனை போன்ற கற்றல்-நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலமும் தொடுதல், அசைத்தல், பரிசோதித்தல் போன்ற செயற்பாடுகள் மூலமும் மாணவர்களது அவதானத்தை விரைவாக தூண்டமுடியும். இதனால் அவர்களது மூளை வேகமாவும் விவேகமாகவும் தொழிற்பட்டு குறியாக்கம் மிகச் சிறப்பாக இடம்பெற வாய்ப்புள்ளது. அத்துடன் மாணவர்கள் கற்ற விடயங்கள் இலகுவில் ஞாபகத்தில் சேமித்து வைப்பதற்கும் தேவையானபோது அதனை நினைவில் கொண்டுவருவதற்கும் இது உதவுகிறது.
ஞாபகத்தை உளவியலாளர்கள் குறுங்கால ஞாபகம் (Short Term Memory) எனவும் நெடுங்கால ஞாபகம் (Long Term Memory) எனவும் இரண்டாகப் பிரிக்கின்றார்கள். இவ்விரு ஞாபகங்களும் கற்றல் மீது வெவ்வேறு வகையில் செல்வாக்குச் செலுத்துவதை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. குறுங்கால ஞாபகத்தில் சேமிக்கப்படும் விடயங்கள் சில வினாடிகள் மாத்திரமே நிலைத்திருக்கும். ஆனால் நெடுங்கால ஞாபகத்தில் சேமிக்கப்படும் விடயங்கள் மிக நீண்ட காலம் நிலைத்திருக்கும் ஆற்றல் மிக்கது (Baddeley, 1966). இதனால் மாணவர்களது குறுங்கால ஞாபகத்தில் சேமிக்கப்படும் விடயங்கள் நெடுங்கால ஞாபகத்தில் சேமிக்கப்படுமானால் அவர்களது கற்றலின் பெறுபேறுகளும் அடைவுமட்டங்களும் உச்ச மட்டத்திற்கு உயர்வடையும்.
குறுங்கால ஞாபகத்தில் சேமிக்கப்படும் விடயங்களை நெடுங்கால ஞாபகத்திற்கு மாற்றுவதற்கான நுட்பங்கள் பின்வருமாறு;
§ கற்றல் மீது அவதானத்தைக் குவித்திருத்தல்
§ கற்கும் போது கற்றல் நுட்பங்கள் மற்றும் கற்றல் சாதனங்களைப் பயன்படுத்தல்
§ தேவையான போது பார்த்தல், கேட்டல், தொடுதல் போன்ற அனுபவங்கள் மூலம் கற்றல்
§ புதிதாகக் கற்றுக்கொள்ளும் விடயத்தை நன்கு பரீட்சயமான ஒரு விடயத்துடன் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் கற்றல்
§ கற்ற விடயங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தல் அல்லது மீளவலியுறுத்தல்
§ கற்ற விடயங்களை ஓய்வு நேரங்களில் ஒத்திகை பார்த்தல
§ உடலுக்குத் தேவையான அளவு ஓய்வு, தூக்கம் மற்றும் தியானம் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளல்
முடிவுரை
கற்றல், ஞாபகம் ஆகிய அறிவு சார் செயன்முறையின் தொடர்பை இக்கட்டுரை ஆராய்கிறது. கற்றலுக்கான ஓர் அடிப்படை உளவியல் காரணியாக ஞாபகம் கருதப்படுவதால் ஞாபகம் இன்றேல் கற்றல் இல்லை என்பது உளவியலாளர்களின் வலுவான வாதமாகும். இதனடிப்படையில் கற்றலின்போது மூளையின் தொழிற்பாடு எவ்வாறு அமைகிறது? கற்பவை ஞாபகத்தில் எவ்வாறு சேமிக்கப்பட்டு மீட்டப்படுகிறது? ஆகியவை தொடர்பாக ஓரளவு விளக்கமாக விவரிக்கிறது. ஞாபகத்தின் முதன்மைச் செயற்பாடான குறியாக்கம் கற்றல் முறைகளுடன் தொடர்புபடும் விதம், அதனைப் பயன்படுத்தி ஞாபகத்தை அதிகரிப்பதற்கான நுட்பங்கள் குறித்தும் இக்கட்டுரை தனது அவதானத்தைச் செலுத்துகிறது. குறிப்பாக மாணவர்கள் தமது கற்றல் பெறுபேறுகளை உச்ச மட்டத்திற்கு கொண்டுசெல்வதற்கான உத்தியாக குறுங்கால ஞாபகத்தில் சேமிக்கப்படும் விடயங்களை நெடுங்கால ஞாபகத்திற்கு மாற்றுவதை வலியுறுத்துகின்றது. மேலும் மாணவர்களது கற்றல் அடைவுமட்டம் அதிகரிப்பதற்கு ஞாபக ஆற்றல் அதிகரிக்கப்பட வேண்டும் எனும் அவசியத்தையும் வேண்டிக்கொள்கிறது.
உசாத்துணைகள்
§ § American Psychological Association. (2020), Learning and Memory, retrieved February 18, 2020, from https://www.apa.org/topics/learning
§ Baddeley, A. D. (1966). The influence of acoustic and semantic similarity on long-term memory for word sequences. Quart. J. exp. Psychol.
§ Wickens A.P. (2005), Foundations of Biopsychology (2nd ed.), New York: Pearson/Prentice Hall.
ஏ.ஆர்.எம். பைசால் (BSW (Hons), PGDE
M,A, Ph.D (Reading)
No comments