News

சிறந்த முறையில் இலக்குகளை அடைவது எவ்வாறு?

இலக்குகள் என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வில் மிகவும் முக்கியமானதொரு கருப்பொருளாக காணப்படுகின்றது. அதேபோல் இக்காலத்தில் மிகவும் முக்கியமாக பேசப்பட வேண்டிய ஒரு விடயமாக காணப்படுகின்றது. ஏனெனில் அனேகமான இளைஞர் யுவதிகளின் இலக்குகள் குறிப்பாக கல்வி மற்றும் தொழில் விருத்தி செயற்பாடுகள்  தோல்வியிலேயே செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு பிரதானமாக காணப்படுவது அவர்கள் வைக்கின்ற இலக்குகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பலவீனமே.

இலக்கினை இலக்கு, நோக்கம், முடிவு என்றெல்லாம் அழைக்கின்றனர். இதனோடு ஒத்த விடயங்களாக இலக்கு முனைப்பு (Goal Oriented), வாழ்க்கை குறிக்கோள் (Life Goal) போன்றவற்றை குறிப்பிடலாம். ஆங்கிலத்தில் இதனை பல்வேறு சொற்கள்  அழைக்கின்றனர். குறிப்பாக Aim, Purpose, Target, Objective, End, Mark and  Intention போன்றவையாகும்.



அனைவரும் நிச்சயமாக இலக்கினை நோக்கி பயணிக்க வேண்டும் இலக்குகள் சிறுபிள்ளை தொடக்கம் வயது வந்தவர் வரை காணப்படும்.வயது எல்லை ஒரு முக்கிய விடயமாக காணப்படாது தங்களது வயதுக்கு ஏற்றாற்போல் அதாவது தங்களது திறன்களுக்கு ஏற்றாற்போல் இலக்குகளை நிர்ணயிக்க முடியும். அவ்வாறு  இலக்குகளை சிறந்தமுறையில் நிர்ணயித்து அதன் வழியே செல்வோமேயானால் நிச்சயமாக எமது இலக்கு கனவுகளை நனவாக்க முடியும். நாங்கள் செய்கின்ற சிறு காரியம் தொடக்கம் பெரும் காரியங்களின் திருப்தி மட்டத்தை அடைய  இலக்குகளின் வழியே பயணிக்க வேண்டும். நாங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு வெற்றிக்கான முயற்சியும் இலக்குகளாகவே காணப்படும். இலக்கின் வழியே செல்லாத அனேகமான முயற்சிகள் தோல்வியில் சென்றிருக்கின்றன இலக்கினை நிர்ணயிக்கும் போது மற்றவரை  ஒப்பிட்டு இலக்கினை நிர்ணயிக்கக் கூடாது, அதேபோல்  அவரால் அந்த காரியத்தை செய்யும் போது என்னால் இந்த காரியத்தை செய்ய முடியாது என்று யாரும் எண்ணக்கூடாது. ஏனெனில் அவரது திறன் சக்தி உங்களது திறன் சக்தியிலிருந்து வேறுபட்டது. அவர் ஒரு திறனில் விசேடமாக இருக்கலாம் நீங்கள் வேறொரு திறனில் விசேடமாக இருக்கலாம் ஆகவே மற்றவரை ஒப்பிட்டு உங்களது இலக்குகளை நிர்ணயிக்க வேண்டாம். தொழில் ரீதியாக பார்க்கும்போது உதாரணமாக  இவ்வுலகில் இருக்கின்ற அனைவரும் மருத்துவர்களல்ல அதேபோல் அனைவரும் ஆசிரியர்களல்ல ஆகவே எமது திறனுக்கு ஏற்ற வகையில் இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் அப்போதுதான் அது அடையக்கூடிய இலக்காக காணப்படும். இலக்குகளை நிர்ணயிப்பதில் உங்களது எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் மிகவும் முக்கியமாக காணப்படுகின்றது இந்த எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் தூண்டுதலே இலக்காக வெளிப்படுகின்றது.

இவ்வாறு காணப்படுகின்ற இலக்குகளை நாங்கள் பிரதானமாக இரண்டு பகுதிகளாக பிரித்து அடையாளப்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் முதலாவதாக காணப்படுவது குறுகிய கால இலக்கு (Short Term Goal) மற்றும் நீண்ட கால இலக்கு (Long Term Goal). குறுகிய கால இலக்கு என்பது குறுகிய காலத்தை அடிப்படையாகக் கொண்ட இலக்குகளாகும். அதாவது குறைந்தது ஒரு வருடங்களுக்கு உட்பட்டதாக அமைந்து காணப்படும். அதாவது ஒரு ஆறு மாத காலத்திற்கு உட்பட்ட ஒரு பயிற்சியினை நிறைவு செய்தல் எனும் இலக்கினை எடுத்துக் கொண்டால் இது ஒரு குறுகிய கால இலக்காக காணப்படும் எவ்வாறாயின் கால எல்லை மற்றும் விடயம் குறுகியதாக காணப்படுகின்றது.

நீண்டகால இலக்கு என்பது குறைந்தது ஒரு வருட காலத்திற்கு மேற்பட்ட இலக்க காணப்படுகின்றது. உதாரணமாக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தல் என்பது நீண்ட கால இலக்காக காணப்படுகின்றது ஏனெனில் குறிப்பாக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும்போது குறைந்தது மூன்று அல்லது நான்கு வருடங்களுக்குள் அந்த கால எல்லை அமைந்து காணப்படுகின்றது ஆகவே அது ஒரு நீண்ட கால இலக்காக காணப்படுகின்றது.

ஆனால் ஒரு நீண்டகால இலக்கினுள் பல குறுகிய கால இலக்குகள் நிச்சயமாக காணப்படும். எவ்வாறாயின் நாங்கள் பல்கலைக்கழகத்துக்கு நுழைந்தவுடன் முதலாவதாக காணப்படுகின்ற பருவகாலத்தில் (First semester) நாங்கள் யாரும் எனது பட்டத்தை முடிக்கவேண்டும் என்று யாரும் எண்ணுவதில்லை மாறாக நான் முதலாவது பருவகாலத்தின் சித்தி பெற வேண்டும் என்று தான் அனைவரும் எண்ணுகின்றோம் முதலாவது பருவகாலம் என்பது ஆறு மாத காலத்துக்கு உட்பட்ட ஒரு காலப்பகுதியாகும் ஆகவே அது ஒரு குறுகியகால இலக்காகும். குறிப்பாக பொது கற்கையை பூர்த்தி செய்ய வேண்டுமாயின் மூன்று வருடங்களும் அதாவது  ஆறு பருவ காலங்களை பூர்த்தி  செய்தவுடன் தான் நாம்  பட்டம் சான்றிதழை பெறுகின்றோம்.

இந்த குறுகிய கால இலக்ககின் பயன்பாடானது  நம் அனைவரது வாழ்நாட்களை எடுத்து பார்க்கும் வேளையில் நாங்கள் அன்றாடம் செய்கின்ற ஒவ்வொரு காரியங்களும் கடமைகளும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறுகிய கால இலக்காக  அமைந்து காணப்படுகின்றது.  குறுகிய கால இலக்குகளை அமைத்துக் கொள்வதன் ஊடாக தமது நீண்டகால இலக்கை அடைதல் இலகுவாக இருக்கும் என்பதோடு நாம் சரியான இலக்கை நோக்கி செல்கின்றோமா? என்பதை தீர்மானிக்க கூடியதாக இருக்கும்.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் நிச்சயமாக இலக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன அந்த இலக்குகளை சிறப்பான முறையில் பேணுவதன் மூலம் அழகானதொரு வாழ்வினை அமைத்துக் கொள்ளலாம்.

இலக்குகளை நிர்ணயிக்கும் போது அனைவரும் சிறந்த முறையில் அவற்றினை  அடைய முடியுமா என்பதை கவனத்தில் கொண்டு இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் எட்டா பழத்துக்கு கொட்டாவி விடுதல் போன்றவற்றினை போல் இலக்குகளை நிர்ணயிக்க கூடாது இலக்குகளை நிர்ணயிக்கும் போது எம்மால் அடையக்கூடிய மற்றும்  எம்மால் முடியும் என்ற எண்ணக் கருவில் தான் இலக்குகளை நிர்ணயிக்க வேண்டுமமே தவிர சிந்தனைக்கும் திறனுக்கும் தொடர்பு இல்லாத வகையில் இலக்குகளை நிர்ணயிக்க கூடாது.

அவ்வாறாயின் எவ்வாறு சிறந்த முறையில் இலக்குகளை நிர்ணயிப்பது?  அதற்காக நீங்கள் கையாளுகின்ற கருவிதான் SMART கோட்பாடு. இந்த கோட்பாட்டின்  S-Specific,M-Measurable, A-Achievable, R-Realistic, T-Time bound. இந்தப்படி முறையின் ஊடாக இலக்குகளை நீங்கள் நிர்ணயிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக

"நான் 2021 தை மாதத்திலிருந்து ஓராண்டு காலத்தினுள் குறைந்தபட்சம் 200 பக்கங்களை கொண்ட தொழிலின் முக்கியத்துவம் என்ற தலைப்பில்  புத்தகத்தினை எழுதுவேன்  .ஒரு வாரத்தில் ஐந்து பக்கங்களை யாவது எழுதுவேன்"  என்னும் இலக்கினை உதாரணமாக எடுத்துக் கொண்டால்

இதில் S-SPECIFIC என்பது திட்டவட்டமான தாக அமைந்தல் என பொருள்படும்.  நீங்கள் இலக்கினை நிர்ணயிக்கும்  போது உங்கள் இலக்கு திட்டவட்டமான தாக இருக்க வேண்டும். அதாவது நீங்கள் வைக்கின்ற இலக்கு உறுதியானதாக இருக்கவேண்டும். உங்களால் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு இலக்காக அமைதல் வேண்டும். இங்கு தொழிலின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் புத்தகத்தை எழுதுதல் என்பது திட்டவட்டமான ஒரு விடயமாக காணப்படுகின்றது . பூர்த்தி செய்ய முடியாத இலக்குகளை யாரும் அடைய முயற்சிக்க வேண்டாம். இன்று அனேகமான பிரச்சனைகள் உருவெடுப்பதற்கு காரணமாக  இந்த உறுதி இல்லாத இலக்குகளை நிர்ணயிப்பது ஒரு பிரதானமாக காணப்படுகின்றது. உறுதியில்லாத இலக்குகளை நிர்ணயித்து அடைய முடியாமல் உள்ளபோது  இறுதியில் மன உளைச்சலுக்கு உள்ளாகி உளரீதியான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். 

இரண்டாவதாக காணப்படுவது M-Measurable. இதன் விளக்கம் அளவிடக் கூடியதாக இருத்தல் எனப்பொருள்படும். அதாவது நீங்கள் வைக்கின்ற இலக்கானது அளவிடக் கூடியதாக இருத்தல் வேண்டும். அதாவது இக்கூற்றின் படி குறைந்தபட்சம் 200 பக்கங்களை கொண்ட ஒரு புத்தகத்தினை எழுதுதல். ஆகவே இங்கு இது அளவிடக் கூடியதாக இருக்கின்றது.

மூன்றாவதாக காணப்படுவது  A-Achievable. இது அடையக் கூடியதாக இருத்தல் வேண்டும் எனப்பொருள்படும். அதாவது நாம் வைக்க என்ற இலக்கை எவ்வாறான விதத்தில் அடையலாம் என்பதை நிச்சயமாக தீர்மானிக்கவேண்டும் இதனை தீர்மானிக்காமல் இலக்குகளை நிர்ணயிக்க வேண்டாம். இக்கூற்றின் படி வாரத்திற்கு ஐந்து பக்கங்கள் வீதம் நாற்பத்தி எட்டு வாரங்களில் நிச்சயமாக அந்த 200 பக்கங்களை பூர்த்தி செய்யலாம்.

நான்காவதாக காணப்படுவது R-Realistic. அதாவது நாம் வைக்கின்ற இலக்கானது யதார்த்தமானதாக இருக்க வேண்டும். இங்கு யதார்த்தம் என்று குறிப்பிடும்போது ஒரு புத்தகத்தை எழுதுவது என்பது முடிந்த காரியம் ஆகும் அதாவது இது யதார்த்தமானது. அதாவது உங்களால்  செய்யக்கூடிய ஒரு காரியமாகும்.

அடுத்து இறுதியாக காணப்படுவது T-Time bound. அதாவது கால எல்லை
, காலவரையறை போன்றவற்றை குறிப்பிடலாம். இக்கூற்றின் படி கால எல்லையானது 2021 தை மாதம் முதல் ஒரு வருட காலத்தினுள் என்று குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறாக இந்த அடிப்படையில் இலக்குகளை நிர்ணயிப்பதால் நிச்சயமாக இலக்குகளை சிறந்த முறையில் அடைய முடியும். இந்த ஐந்து படிமுறைகளையும் பின்பற்றாமல் இலக்குகளை நிர்ணயித்தல் நிச்சயமாக தோல்வியிலேயே அந்த இலக்குகள் முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இங்கு பார்த்தோமேயானால் இந்தக் கூற்றில் காணப்படுகின்ற குறுகியகால இலக்காக வாரத்திற்கு ஐந்து பக்கங்கள் எழுதுதல் காணப்படுகின்றது. நீண்ட கால இலக்காக குறைந்தபட்சம் 200 பக்கங்களை கொண்ட புத்தகம் ஒன்றை எழுதுதல் என்பது நீண்ட கால இலக்காக காணப்படுகின்றது.


இவ்வாறாக தொழில்சார் மற்றும் கல்வி ரீதியான  இலக்கு ஒன்றைக் கட்டியெழுப்புவது தொடர்பாக இவ்விதி முறையினை பின்பற்றுவதன் ஊடாக இலக்கினை சிறப்பாக அடைந்துகொள்ள முடியும்.

Mr. P.Vivekananthan (B.A (HONS) In Philosophy (EUSL) Sri Lanka, M.A (Course Work) in C.P.D.S (Conflict Peace and Development Studies-Nepal/Sri Lanka) and National Diploma in Career Guidance (SLF-2017/2018)

Career Guidance Instructor- National Youth Corps,
Visiting Lecturer (Career Guidance-Tamil Medium) - SLF
Certify Career Analyst- NCGA & Edumilestones
Counselor of SMART-SLICG (Sri Lanka Institute of Career Guidance),
Trainer of Adolescent & Youth Health

No comments

Lanka Education. Powered by Blogger.