News

கொரோனா (COVID-19) தொற்று நோயைத் தடுப்பதில் தனிநபர் ஆளுமையின் பங்களிப்பு


இன்று உலகளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்ற தொற்று நோய்களில் பிரதானமாக காணப்படுவது COVID-19 என்றழைக்கப்படும் கொரோணா தொற்று நோயாகும். இன்று உலக மக்கள் அனைவராலும் முக்கியமாக  பேசப்பட்டு அனைவருக்கும் அச்சுறுத்தலாக திகழ்கின்ற நோய்களில் இது முதல் இடம்பெற்றிருக்கின்றது. சிறுபிள்ளை தொடக்கம் முதியவர்களென அனைவரையும் தாக்கக் கூடிய ஒரு வைரஸ் நோயாக இது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அனைவரது வாழ்விலும் தினமும் அடிக்கடி பேசப்படுகின்ற ஒரு கொடிய நோயாக இது திகழ்கின்றது.

கொவிட் 19 என்று விஞ்ஞான ரீதியாக அழைக்கப்படும் இந்த வைரஸ் கிருமியானது மனித உடலில் பிரதானமாக சுவாசத் தொகுதியில் சென்று மனிதனுக்கு உடல் உள ரீதியாக தாக்கத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாக காணப்படுகின்றது. அத்தோடு இலகுவில் மற்றவருக்கு தொற்றக் கூடிய ஒரு கொடிய நோயாக இவ்வுலகை ஆட்டிப் படைக்கின்றது. இதன் தொற்று பரவலானது விசேடமாக தொடுகையின் மூலமே இடம்பெறுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு காணப்படுகின்ற இந்த கொடிய தொற்றுநோய்க்கு பல நாடுகள் பல்வேறுபட்ட ஆய்வுகள் மூலம்  மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு காணப்படுகின்ற இந்த நோய்க்குரிய காவியை நினைத்தால் எமக்கு அச்சம் மேலும் தலைதூக்கி நிற்கின்றது. உதாரணமாக இன்று  உலகில் பல கொடிய தொற்றுநோய்கள் காணப்படுகின்றது அந்த வகையில்  டெங்கு நோயினை  பார்ப்போமானால் அதற்குரிய தொற்றுக்காவியாக டெங்கு நுளம்பு காணப்படுகிறது, மலேரியா நோயை பார்ப்போமானால் அதற்குரிய தொற்றுக்காவியாக மலேரியா நுளம்பு காணப்படுகிறது அதனைப் போல் இன்று பரவலாகப் பேசப்படும் மற்றும் ஒரு நோயாக காணப்படுவது எலிக் காய்ச்சல் ஆகும். அதற்குரிய தொற்றுக்காவியாக  எலிகள் காணப்படுகின்றது. இவ்வாறு ஐந்தறிவுக்குட்பட்ட ஜந்துக்களே நோய்களை பரப்புவதில் பிரதானக் காவிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.  இப் காவிகளை மனிதர்களாகிய நாங்கள் அறிந்து தங்களது தனி நபர் ஆளுமையினைப் பேணி  அழிக்கக் கூடிய தன்மையும் வல்லமையும் எம்மிடம் இருக்கிறது. அதனால் அவ் நோய் பரவலை கட்டுப்படுத்தக் கூடிய வாய்ப்புகளும் அதிகமாக இவ்வுலகில் காணப்படுகின்றது  .

ஆனால் கொரோணா நோய்க்குரிய தொற்று காவியாக  காணப்படுவது மனிதர்களே. ஆனால் மனிதர்களை அழிக்கக்கூடிய உரிமை யாருக்கும் இல்லை. ஆகவே மனிதர்களாகிய நாம் உணர்ந்து செயற்பட்டால் மாத்திரமே இவ் நோயினை அழிக்க முடியுமே தவிர அவ்வாறு இல்லையெனில் மனிதர்களாகிய நாங்கள் இவ் நோயினால் அழிக்கப்படுவோம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை 

கொரோணொ தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் பல  நாடுகளும் விஞ்ஞானிகளும் பல்வேறு பட்ட சிரமங்களை மேற்கொண்டு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான  விடயங்களில் போராடிக்  கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு மேலாக ஒவ்வொரு மனிதனும் சுயமாக சிந்தித்து தங்களுடைய தனிநபர் ஆளுமையையினை சிறந்த முறையில் பேணினால் இவ் நோயினை இல்லாதொழித்து சிறந்த ஒரு நோய் இல்லாத சமூகத்தையும் நாட்டையும்  உருவாக்க முடியும். அவ்வாறாயின் எவ்வாறு பேணுவது ?

ஆளுமை என்பது உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளிலிருந்து உருவாகும் நடத்தைகள், அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி வடிவங்களின் தொகுப்பாக வரையறுக்கப்படுகிறது. 
ஆளுமை என்பதைச் சுருக்கமாக "ஒருவரைத் தனித்துவமானவராக ஆக்கும் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள் என்பவற்றாலான சேர்க்கை" என வரையறுக்கலாம். அத்துடன் ஆளுமை ஒருவரின் உள்ளிருந்து உருவாகி அவருடைய வாழ்க்கைக் காலம் முழுதும் சீராக கொண்டு செல்ல உதவுகின்றது. இவ் ஆளுமையின் ஒரு பெரும் பகுதியாக அமைவது தான் தனிநபர் ஆளுமை.

தனிநபர் ஆளுமையின் பிரதான பண்புகளாக நாம் பார்க்கும் போது தனிநபர் ஆளுமையின் வெளிப்பாடாக ஒரு மனிதனின் புறத்தோற்றம் அமைந்து காணப்படுகின்றது. அதற்குப் பிற்பாடு அவரது எண்ணங்கள் மற்றும்செயற்பாடுகளின் வடிவமைப்பே தனிநபர் ஆளுமையின் பண்புகளாக திகழ்கின்றது. தனிநபர் ஆளுமையில்  மிகவும் செல்வாக்கு செலுத்துகின்ற கூறுகளில் முக்கியமானவையாக  சிறந்த தொடர்பாடல், சட்ட ஒழுங்கு விதிமுறைகளை பின்பற்றி நடத்தல், அறிவுரைகளை பின்பற்றுதல், சமூக நல்லிணக்கத்திற்காக செயற்படுதல், நாட்டின் வளர்ச்சிக்காக பங்கெடுத்தல்போன்றவை மிகமுக்கியமாக அமைகின்றது.

இவற்றில் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை பின்பற்றி நடத்தல் மற்றும் அறிவுரைகளை பின்பற்றுவது போன்ற விடயங்களை பார்க்கும்போது இவ் நோயினைக் தடுப்பதற்காக சுகாதார அமைச்சினால் வர்த்தமானியிடப்பட்ட  பல்வேறுபட்ட விளக்கவுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.  குறிப்பாக முகக் கவசம் அணிதல், தனிநபர் உடல் உள ஆரோக்கியம் பேணல், சமூக இடைவெளியினை பேணல், போக்குவரத்து விதிமுறை மற்றும் ஆலோசனைகளை பின்பற்றல் போன்ற விடயங்கள்  முக்கியமானதாக குறிப்பிடலாம். . இவற்றை ஒவ்வொரு மனிதனும் தனது கட்டாயக் கடமையென உணர்ந்து செயல்பட்டால் நிச்சயமாக இந்த தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். 

இல்லையெனில் இவ் கொடிய நோயினை கட்டுப்படுத்துவது என்பது முடியாத விடயமாகும். மேற்குறிப்பிட்ட அனைத்தும் ஒரு தனி நபரது ஆளுமையில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய காரணங்களாக இருப்பதனால் அவற்றை பின்பற்றி நோய் பரவலை தடுப்பதற்கான  நடவடிக்கையினை மேற்கொள்வது அனைவரது கட்டாய  கடமையாகும். அவ்வாறு பின்பற்றவில்லை எனில் அது ஒரு தனி மனித ஆளுமையின் குறைபாடாகவே காணப்படுகின்றது. 

அடுத்து தனிநபர் ஆளுமையில் முக்கியமாக காணப்படுவது சிறந்த தொடர்பாடல் ஆகும் .தொடர்பாடலில் பிரதானமாக வாய்மொழி, வாய்மொழி அல்லாத, எழுத்து மூலமான, மற்றும் கட்புல செவிப்புலங்களின் ஊடான தொடர்பாடல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மிகவும் பிரதான கூறுகளாக  காணப்படுவது கேட்டல் மற்றும் அவதானம் போன்றவையாகும். கொரோணா தொற்றுநோய் பரவல் தடுப்பு சம்பந்தமாக சுகாதார அமைச்சினாலும் மற்றும் ஊடகங்களிலும் (பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளம்) ஊடாக வெளியிடப்படுகின்ற கருத்துக்களை தெளிவாக விளங்கி, பின்பற்றி நடப்பதற்கு தொடர்பாடல் மிக முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது. தவறான முறையில்  அதாவது தெளிவில்லாத முறையில் புரிந்துகொள்வதினால் மேலும் பல பிரச்சனைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது. ஆகவே சிறந்த முறையில் தொடர்பாடலினை பேணுவதால்  உண்மையான விடயங்களை அறிந்து சிறப்பாக செயற்பட்டு கொடிய  நோயிலிருந்து எம்மையும் சமூகத்தையும் பாதுகாத்து கொள்ளலாம் என்பதில் எவ்வித அச்சமும் இல்லை.

இவ்வாறாக ஒவ்வொரு தனி மனிதனும் சுயமாக சிந்தித்து தங்களது தனிநபர் ஆளுமையையினை கட்டாயமாக பின்பற்றினால் நிச்சயமாக இந்த கொடிய தொற்று நோயிலிருந்து நம்மையும், நமது சமூகத்தினையும், நாட்டினையும், இவ்வுலகத்தினையும்  மீட்டுக் கொள்ளலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Mr. P.Vivekananthan (B.A (HONS) In Philosophy (EUSL) Sri Lanka, M.A (Course Work) in C.P.D.S (Conflict Peace and Development Studies-Nepal/Sri Lanka) and National Diploma in Career Guidance (SLF-2017/2018)

Career Guidance Instructor- National Youth Corps,
Visiting Lecturer (Career Guidance-Tamil Medium) - SLF
Certify Career Analyst- NCGA & Edumilestones
Counselor of SMART-SLICG (Sri Lanka Institute of Career Guidance),
Trainer of Adolescent & Youth Health

No comments

Lanka Education. Powered by Blogger.