News

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை விரைவாக உள்வாங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

 


உயர்தர பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட்டு, பல்கலைக்கழகங்களில் மாணவர்களை விரைவாக உள்வாங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்தார்.


நேற்று (16) காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமைச்சர் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளை குறுகிய காலத்திற்குள் வெளியிட முடிந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இந்த பரீட்சை நடைபெற்று ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் தான் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் நடைமுறை இருந்து வருகின்றது.

இதுவே கடந்த பல வருடங்களாக தொடர்ந்து வரும் நடைமுறையாகும். இந்த நடைமுறை குறித்து எந்த வகையிலும் திருப்திக் கொள்ள முடியாது. நாம் இதில் ஏற்படும் தாமதத்தை முற்றாக நீக்குவதற்கு முடிந்த வரையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். படிப்படியாக இந்த நிலைமையை மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மாணவர்களுக்கு தமது உயர்கல்வியை திட்டமிட்ட வகையில் விரைவாக தொடர்வதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்று வெளியான தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில், இந்த பெறுபேறுகள் நேற்றைய தினம் கல்வி அமைச்சின் பரீட்சை திணைக்களத்தின் இணையதளங்கள் மூலம் வெளியிடப்பட்டன.

பரீட்சைக்கு சுமார் 336,000 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இந்த வருடத்தில் இந்த பரீட்சை பெறுபேறுகளை 33 நாட்களில் வெளியிட முடிந்துள்ளது. முன்னர் இந்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிட பல மாதங்கள் செல்லும். இந்த துறைச்சார்ந்த அனைவரினதும் அர்ப்பணிப்பின் காரணமாகவே மாணவர்களின் பெறுபேறுகளை விரைவாக வெளியிட க்கூடியதாக இருந்தது. மற்றுமொரு பெருமைக்குரிய விடயம் என்னவென்றால், எமது மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை சென்று கல்வி பயின்று வருகின்றனர். இம்முறை இந்த பரீட்சையில் 10 பேர் 200 புள்ளிகளை பெற்று சித்திப்பெற்றமை பாராட்டத்தக்கதாகும் என்று தெரிவித்தார்.

எமது நாட்டின் பெறுமதி மிக்க சொத்து மாணவர் சமூகமாகும். அவர்களின் முன்னேற்றத்திற்காக சமகால அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்வதே நோக்கமாகும் என்றும்; கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

Lanka Education. Powered by Blogger.