News

படிப்பது மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

போட்டித்தேர்வு, நுழைவுத்தேர்வுக்கு தயாராவோருக்கு ஞாபக சக்தி என்பது ரொம்ப முக்கியமானது. சில பேருக்க எவ்வளவு முட்டி மோதி படித்தாலும், அவை ஞாபகத்தில் நிற்பதில்லை. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. படிக்கும் முறையில் இருந்து, எப்போது படிக்கின்றோம், எப்படி படிக்கின்றோம், எந்தவிதமான உணவுகளை எடுத்துக்கொள்கிறோம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் சார்ந்தது. 

இவற்றில் மிக முக்கியமான 5 விஷயங்களை இங்கு பார்ப்போம். போட்டித் தேர்வுக்கு தயாராவோர் இந்த பழக்க வழக்கங்களை பின்பற்றினால், முடிந்த வரையில் படித்தவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும்.

1. பாடத்திட்டமும் சரியான திட்டமிடலும்

முதலில் நாம் என்ன படிக்க வேண்டும் என்பதை திட்டமிடுதல் அவசியம். போட்டித்தேர்வாகினும், பொதுத்தேர்வாகினும் சரி, அனைத்திலும் உள்ள பாடத்திட்டத்தை முதலில் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை ஒரு முறைக்கு இரு முறை முழுமையாக வாசிக்கவும், அதே போல், மதிப்பெண் பங்கீடு முறையும் பார்க்க வேண்டும்.

பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் முறை, எளிமையான பாடம், கடினமான பாடம் என நீங்களே உங்களுக்கான படிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இயல்பாக ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பாடங்களில் அதீத ஆர்வம், அறிவு இருக்கும். அவற்றை பார்க்க வேண்டும்.


2. மனப்பாடம்

மனப்பாடம் செய்வது என்பது ஒரளவுக்கு, தற்காலிக பலனாக மட்டுமே அமையும். பொதுவாக மனப்பாடம் செய்து படித்தால், அது எக்காலத்துக்கும் பயன்படாது. சில பாடங்கள், பகுதிகள் மட்டும் நேர மேலாண்மையை கருத்தில் கொண்டு மனப்பாடம் செய்யலாம். உதாரணமாக கணித சூத்திரங்கள், வரலாறு காலக்கோடு போன்ற பகுதிகள் மனப்பாடம் செய்யலாம். உண்மையில் இவைகளை புரிந்து படித்தால் மென்மேலும் சிறப்பாக இருக்கும். ஆனால், தேர்வு நெருங்கும் நேரத்தில் கணித சூத்திரங்கள் எப்படி வந்தது, அதன் வரலாறு என்ன என்று பார்த்துக் கொண்டே போனால், நமக்கு நேர விரயம் தான் ஏற்படும். எனவே, நேரத்துக்கு தகுந்தாற்போல் படிக்க வேண்டும்.

3. படிக்கும் காலம்

எப்போது படிக்க வேண்டும்? காலையில் படிக்கலாமா, பகலில், இரவில் படிக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படும். இதற்கான பதில் அவர்களிடத்திலேயே தான் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் படித்தால் மட்டுமே நினைவில் இருக்கும். சிலருக்கு இரவுக்கு மேல் படிப்பது உகந்த நேரமாக இருக்கும், இன்னும் சிலருக்கு அதிகாலை நேரத்தில் படிப்பது பிடிக்கும். அதிகாலை நேரம், அதாவது காலை 4.30 மணிக்கு எழுந்து படித்தால், அப்போது என்ன படித்தோமோ அது நீண்ட காலத்துக்கு நினைவில் நிற்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால் இது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். மாணவர்கள் எந்த நேரத்தில் படிப்பது தமக்கு உகந்ததாக இருக்கிறதோ அதை அறிந்து அதற்கேற்றது போல தமது படிப்பு நேரத்தை பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

4. சரியான திட்டமிடல்

பாடத்திட்டத்தின்படி நமக்கு எந்த பாடத்தில் ஆர்வம் உள்ளது, எந்த பாடம் கடினமாக உள்ளது என்பதை முடிவு செய்ய வேண்டும். சிலர் ஆர்வ கோளாறு காரணமாக, பிடித்த பாடத்தையே திரும்ப திரும்ப படிப்பர். 

பிடித்த பாடத்தோடு நின்று விடாமல், கடினமான பாடத்தையும் படிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். படிப்பது பிடித்து படிக்க வேண்டும். ஆர்வத்தோடு படிக்க வேண்டும். பாடங்கள் புரியவில்லை என்றால், அந்த பாடம் நன்கு தெரிந்த ஒருவரிடமோ, நண்பர்களிடத்திலோ தயங்காமல் கேட்கலாம்.

5. யோகா, தியானம்

யோகா, தியானம் செய்வது நூறு சதவீதம் நினைவுத் திறனை அதிகரிக்கும். எனவே, அடிப்படை யோகா மற்றும் தியானத்தை கற்றுக்கொண்டு, நாள்தோறும் காலை, மாலை இருவேளையிலும் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் படிப்பதற்கு முன்பாக 5 நிமிடங்கள் தியானம், பிராணயாமம், மூச்சுப்பயிற்சியில் செய்து விட்டு படிக்க வேண்டும். இது உண்மையில் நல்ல பலன்களை கொடுக்கும்.

யோகா, தியானம் செய்ய அதிக காசு கொடுத்து பயிற்சி மையங்களில் சேர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடிப்படை யோகா மட்டும் கற்றுக்கொண்டாலே போதுமானது.

6. உணவு முறை

உணவு முறையானது நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. தேர்வு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவு பொருள்கள் என்று பெரிய பட்டியலே உண்டு. எனவே, உணவு பழக்கவழக்கத்தில் கடும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்.

சுவையாக உள்ளது என்று கேடு விளைவுக்கும் உணவுகளை, திண்பண்டங்களை தவிர்க்க வேண்டும். குறைந்த பட்சம், தேர்வு முடியும் வரையிலாவது அத்தகைய உணவுகளை தவிர்த்து விட்டு, ஆரோக்கியமான உணவு பழக்கத்துக்கு மாறலாம்.



1 comment:

Lanka Education. Powered by Blogger.