News

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மனு மீள விசாரணைக்கு

 



நடைபெற்று முடிந்த  தரம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் வெளியான நிலையில், மீண்டும் பரீட்சையை நடத்த உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் 3 வினாக்களுக்கும் இலவச புள்ளிகள் வழங்க தீர்மானித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் முழு கவனம் செலுத்தியுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பெசிர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் புலமைப்பரிசில் பரீட்சை மிகவும் முக்கியமான பரீட்சை எனவும், பரீட்சையில் வழங்கப்படும் ஒவ்வொரு சித்தியும் மிகவும் முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் சட்டத்தரணி, கிராமப்புற மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்கு இதுவே ஒரே வழி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, குறித்த பரீட்சையில் ஏதேனும் அநீதி நடந்தால், அது ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்துக்கும் பாதகமான விளைவை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Lanka Education. Powered by Blogger.